சென்னை பெருவெள்ளத்தின் துயர் துடைக்க களத்தில் பல தன்னார்வலர்கள் பணிசெய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பலரும் தொடர்பை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில், “நடிகர் மயில்சாமி உயிரோட இருந்திருந்தா… இந்த பெருவெள்ள பாதிப்புக்கு களத்துல இறங்கி உதவியிருப்பாரே” என்பதுதான் பலரது ஆதங்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது. சமூக வலைதளங்களில் இதைப் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
2015-ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது சூறாவளியாய் களத்தில் சுழன்று உணவு, மளிகைப் பொருட்களை வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைத்தார் மயில்சாமி. இப்போது, அவர் இல்லாததால் வருத்தத்துடன் பதிவு செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிலையில் மயில்சாமி மகன் நடிகர் அன்புவிடம் பேசினோம்,

“அப்பா உயிரோட இருந்திருந்தா, வீட்லயே அவரைப் பார்த்திருக்க முடியாது. இந்நேரம் வெள்ள பாதிப்பு பகுதிகள்ல உதவி செஞ்சுட்டிருந்திருப்பாரு. உதவி பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா யார் பேச்சையும் கேக்கமாட்டார். கடனை வாங்கியாச்சும் செஞ்சுடுவார். 2015 வெள்ளத்தப்போ நெட்வொர்க் எல்லாம் இல்லாததால நாங்க மட்டும் சொந்த ஊருக்குப் போய்ட்டோம். ஆனா, அப்பா எங்கக்கூட வராம கைல இருந்த பணம், அம்மாவோட நகையெல்லாம் அடகு வெச்சு உதவி செய்தாரு. பைபாஸ் அறுவை சிகிச்சைப் பண்ணினதால ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். ‘எல்லோரும் கஷ்டப்பட்டுட்டுக் கிடக்கும்போது, என்னால எப்படி நிம்மதியா தூங்கமுடியும்?’னு சொல்லி எங்கப் பேச்சைக் கேக்கவே இல்ல.
சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் இல்லாதவங்களுக்கு கொடுத்துக் உதவுறதையே லட்சியமா கொண்டிருந்தாரு. இதனாலேயே, எங்கம்மாவுக்கு போன் பண்ணி, ‘உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க. உங்களுக்கே சம்பளத்தைப் போட்டு விட்டுடறோம்’னு நிறைய தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்காங்க. அப்பாவுக்கு அந்தளவுக்கு இளகின மனசு. எங்களுக்காக சொத்து பத்துன்னு எதுவும் சேர்த்து வெக்கல. எல்லாம் ஏழைங்களுக்குத்தான். ‘ஆம்பள பசங்க நீங்க. நாளைக்கு கஷ்டப்பட்டு உழைச்சு உங்க திறமையாலதான் முன்னேறி வரணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். நாங்களும் அப்பா சொல்படிதான் வாழ்ந்துட்டிருக்கோம்.

‘சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் உதவி பண்ணியே அழிச்சுட்டிருந்தா, நாள பின்ன எதாவது ஒன்னுன்னா உனக்கு வருவாங்களா?’ன்னு சொந்தக்காரங்கல்லாம் கேப்பாங்க. ‘எதிர்பார்த்து எதையுமே செய்யக்கூடாது. நமக்கு என்னத் தேவையோ கடவுள் எப்பவும் கொடுப்பார்’னு எம்.ஜி.ஆர் சொன்ன டயலாக்கத்தான் அப்பாவும் சொல்வாரு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செஞ்சுட்டிருந்த அப்படிப்பட்ட அப்பா, இப்போ நம்பக்கூட இல்லையேன்னு வேதனையோட நாட்களைக் கடத்திட்டு இருக்கோம். அவரை சாமியா நினைச்சுத்தான் தினம் கும்பிட்டுட்டு இருக்கோம். அப்பாவோட இழப்பின் வலி, எங்களைவிட அம்மாவுக்குத்தான் அதிகம்.
அப்பா அம்மாவை எப்படி பார்த்துக்குவாரோ, அப்படித்தான் நாங்களும் இப்போ பார்த்துட்டு வர்றோம். அம்மா கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்திட்டிருக்காங்க. அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா அப்பாவால இவ்ளோ உதவிகளைச் செஞ்சிருக்க முடியாது. அம்மாவுக்கும் அப்பாவோட குணம்தான்” என்று பெருமையுடன் பேசும் நடிகர் அன்பு, தற்போது கவுண்டமணியுடன் ‘ஒத்த ஓட்டு முத்தையா படத்திலும், தனுஷின் 50 வது படத்திலும் நடித்து வருகிறார்.

“இப்பவும் எங்க வீட்டுக்கு உதவி கேட்டு வர்ற மக்களுக்கு எங்களால முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டுத்தான் இருக்கோம். முடியாதபட்சத்துலதான் நண்பர்கள், தன்னார்வலர்கள் மூலமாவும் உதவிகளைச் செய்றோம். அவங்களும் அப்பாவுக்காக செஞ்சுக்கொடுக்கிறாங்க. இந்த நேரத்துல எல்லோருக்கும் எங்க நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறோம். வீட்டுக்கு வர்றவங்க.. ஏரியாவுல பார்க்கிறவங்கல்லாம் ‘மயில்சாமி அண்ணன் உயிரோட இருந்திருந்தா எங்களை கைவிட்டிருக்க மாட்டாரே.. அவருக்கா இந்த நிலைமை’ன்னு சொல்லி கண்ணீர் வடிக்குறாங்க. பலர் சமூக வலைதளங்கள்ல அப்பாவை மிஸ் பண்ணி பதிவுகளும் போடுறாங்க. இதெல்லாம் பார்க்கும்போது, அப்பா எல்லார் மனசிலும் வாழ்ந்துட்டுதான் இருக்கார்னு சந்தோஷமா இருக்கு. அப்பாவோட நினைவுநாளுக்கு ஏழை மக்களுக்கு பெருசா உதவி பண்ணலாம்னு திட்டமிட்டிருக்கோம்” என்கிறார் நெகிழ்வுடன்.