அந்தரங்க உறுப்புகளில் அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
”அந்தரங்க உறுப்புகளிலும், தொப்புளிலும் விதவிதமான வளையங்கள், முத்துகளை மாட்டிக்கொள்ளும் ஃபேஷன் உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலியல் விஷயங்களில் கட்டுப்பாடற்ற தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டிலும் இந்தப் பழக்கம் மெள்ள மெள்ள பரவிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்ல, ஃபேஷன் விஷயங்களில் அதிக ஈடுபாடுகொண்ட எல்லா வயதினரும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூஸ் போட்டுக்கொள்வதிலும், நகைகள் போட்டுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதுவும் காதுகுத்திக்கொள்வதுபோல தான். சிறிது நேரம் வலிக்கும். பிறகு சரியாகி விடும்.

அந்தரங்க உறுப்புகளில் நகைகளை மாட்டியதால் தொற்று ஏற்பட்டு வருடத்துக்கு ஒன்றிரண்டு நபர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். குறிப்பாக ஆண்கள். ஆணுறுப்பில் வளையம் மாட்டியதால் தொற்று ஏற்பட்டு வருகிறார்கள். ஒரு பெண் தன்னுடைய பெண்ணுறுப்பின் மேல் பகுதியைப் பெரிதுபடுத்துவதற்காக அந்த இடத்திலுள்ள தோலுக்குள் ஒரு வளையத்தை வைத்து தைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டதால், எங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். தேவையான சிகிச்சையளித்து அதை சரி செய்தோம். சில நேரங்களில் இந்தத் தொற்றை சரிசெய்வதற்காக பெண்ணுறுப்பின் மேல் தோலையே நீக்கி விட வேண்டி வரலாம். ஆண்கள், தங்கள் உறுப்பின் நுனியில் சின்னச்சின்ன வளையங்களை மாட்டிக்கொள்கிறார்கள். இந்த வளையங்கள் இறுக்கமாக மாட்டிக்கொண்டாலோ அல்லது அந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டாலோ உறவுகொள்வதிலேயே சிக்கல் ஏற்படும். மாட்டிக்கொண்டதை எடுக்க அறுவை சிகிச்சைகூட தேவைப்படலாம்.
இது ஹெச்.ஐ.வி காலம். ஊசியால் உடம்பில் குத்த வேண்டி வருகிற எந்த ஃபேஷன் விஷயங்களையும் செய்யாமல் இருப்பதே நல்லது. இது ஹெச்.ஐ.வி தொற்று வரை ஏற்படுத்தலாம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.