சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் (டிச.13, 14) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை, ராமநாதபுரம் மாவட்டம்பாம்பனில் தலா 3 செமீ மழை பதிவானது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மாஞ்சோலை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், மண்டபம், தூத்துக்குடி மாவட்டம்குலசேகரப்பட்டினம், திருச்செந்தூரில் தலா 1 செமீ மழை பதிவானது.