மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழகமெங்கும் இருந்து உணவு, உடை, மருந்து எனத் தங்களால் முடிந்த உதவிகளை மக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த உணவுக்குழாய் பாதிப்பால் பால் மட்டும் குடித்து வாழும் 19 வயது அபினேஷ் சென்னை வெள்ள பாதிப்புக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1,000-த்தை அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அபினேஷின் தந்தை வசந்தகுமாரிடம் பேசினோம், “மயிலாடுதுறைதான் எங்க சொந்த ஊர். டீ மாஸ்டரான நான் வேலை தேடி மனைவி தேவி மற்றும் எனது மூன்று மகன்களுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்லடம் வந்தேன். எனது இரண்டாவது மகன்தான் அபினேஷ். அவன் பிறந்தப்பவே காது இரண்டும் மூடிய நிலையில்தான் இருந்தது. வாயும் பேச முடியவில்லை. அதன் பிறகு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அபினேஷுக்கு உணவுக்குழாய் இயல்பை விட மிகச் சிறியதாக இருப்பதாகவும், உள்நாக்கில் பிளவு ஏற்பட்டுள்ளதால் உணவை உட்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் கை விரித்த நிலையில், கடவுள் கொடுத்த குழந்தையான அபினேஷை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம். உள்நாக்கு பிளவாலும், உணவுக்குழாய் சிறிதாக இருப்பதாலும் பிறந்ததிலிருந்தே வெறும் பால் மட்டுமே குடிப்பதாலும் உடலில் சத்துகள் சுத்தமாக இல்லை. அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவன் எவ்வளவு காலம் இருப்பானோ எங்களுடன் இருக்கட்டும் என்று முடிவு செய்து வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டோம்.
5 வயது இருக்கும்போது, மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அபினேஷுக்கு உள்நாக்கில் அறுவை சிகிச்சையை இலவசமாகச் செய்தனர். அதன் பிறகு கொஞ்சமாகச் சத்தம் மட்டும் போட முடிந்தது. ஆனால், பேச முடியவில்லை. பாலுடன் வேறு ஏதாவது ஊட்டச்சத்து பவுடர் அல்லது உணவுகளை அரைத்துக் கொடுத்தால் உடனடியாக அவனுக்குப் பேதியாகிவிடும். எனவே 19 ஆண்டுகளாகப் பால் மட்டுமே குடித்து வாழ்கிறான். இன்று வரை கை சைகையால்தான் எங்களுடன் பேசுவான்.
ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை பால் தேவைப்பட்டதுடன், அவனுக்கான மருந்து, மாத்திரை செலவு என ரூ.500-க்கும் மேல் செலவானது. ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. இது தொடர்பாக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். எனது மகனின் நிலையைப் பார்த்து, பல்லடத்தில் எந்த முன் தொகையும் பெறாமல் ஆவின் டீ கடையை அரசு அமைத்துக் கொடுத்தது.

தற்போது, கடையில் அமர்ந்து வியாபாரமும் பார்த்து வருகிறான். கடைக்கு வருவோர் என்ன வேண்டும் என என்னிடம் கூறுவார்கள். அதை நான் அவனுக்குப் புரியும் வகையில் சைகையில் தெரிவிப்பேன். அதை அவர்களுக்குச் சரியாக எடுத்துக் கொடுப்பான். தற்போது வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டு அவன்தான் என்னை வீட்டிலிருந்து கடைக்கு அழைத்து வருவது போவது என்றிருக்கிறான். அவன் எப்போதும் தன்னை உற்சாகமாகவே வைத்துக் கொள்வான்.
அவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் ஆவின் கடை ஒதுக்கப்பட்டதால், அவர் எப்போது தொலைக்காட்சியில் பேசினாலும் ஆர்வமாகப் பார்ப்பான். என்ன பேசுகிறார் என்பதை என்னிடம் கேட்பான். நான் சைகையில் தெரிவிப்பேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் சென்னை வெள்ளம் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வெள்ள நிவாரண நிதி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதைப் பார்த்த அபினேஷ், முதல்வர் என்ன பேசினார் என என்னிடம் கேட்டான். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி உதவி அளிக்குமாறு முதல்வர் சொல்கிறார் என்றேன். அவனுக்கு மாத மாதம் அரசின் மாற்றுத்திறனாளி உதவித் தொகை ரூ.2,000 வருகிறது. அதிலிருந்து ரூ.1,000-த்தை நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தான்.

இதைத் தொடர்ந்தே, மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து முதல்வரின் வெள்ள நிவாரண நிதியை அளிக்க ஏற்பாடு செய்தோம். இந்த ரூ.1,000 அவனுக்கான 3 நாள் பால் செலவு!” என்றார்.
மருத்துவர்கள் கை விரித்த நிலையிலும் வெறும் பாலை மட்டுமே குடித்துக் கொண்டு தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதுடன், பிறருக்கு உதவி செய்யும் நிலைக்கு அபினேஷ் உயர்ந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்த்துகள் அபினேஷ்!