புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த யுஏபிஏ சட்டம் (UAPA – Unlawful Activities Prevention Act) கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான 6 பேர் மீதும் டெல்லி போலீஸார் இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உபா சட்டத்தின் பிரிவு 16 (பயங்கரவாத செயல்), பிரிவு 18 (சதிச் செயல்) ஐபிசி பிரிவுகள் 120பி (கிரிமினல் சதி), 452 (அத்துமீறி நுழைதல்), 153 (கிளர்ச்சி செய்யும் நோக்கில் தூண்டுதலில் ஈடுபடுதல்), 186 (அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் 353 (மக்கள் பணி செய்பவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்ததல், அவர் மீது தாக்குதல் நடத்துதல்) எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உபா சட்டத்தின் பிரிவு 16-ன் படி, தீவிரவாத செயல் மூலம் யாரேனும் உயிரிழக்க நேர்ந்தால் குற்றத்தை இழைத்தவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. உயிரிழப்பு நேராவிட்டால் 5 ஆண்டுகள் சிறை முதல் ஆயுள் சிறை வரை கிடைக்க வாய்ப்புண்டு. உபா சட்டப்பிரிவு 18-ன் கீழ், தீவிரவாத செயலுக்கு சதித் திட்டம் தீட்டுதல் என்பது 5 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை வரை தண்டனையாக முடியும்.
முன்னதாக புதன்கிழமை மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் கைகளில் புகை குப்பியுடன் குதித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதேவேளையில் அவைக்கு வெளியே நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இரண்டு பெண்கள் கோஷமிட்டு கைதாகினர். அவர்களிடமிருந்தும் வண்ண புகைக் குப்பிகள் கைப்பற்றப்பட்டன. அந்த 4 பேருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போது, அவர்கள் 6 பேரின் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்றைய சம்பவத்தை 6 பேர் கொண்ட குழுவினர் மிகவும் நேர்த்தியாக திட்டம் தீட்டி செய்துள்ளனர் என்று போலீஸார் கூறுகின்றனர். 5 பேர் கைதான நிலையில் லலித் என்ற நபரை மட்டும் போலீஸார் தேடி வருகின்றனர். 6 பேருக்குமே கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்காக சமூக வலைதளங்கள் மூலமாகவே கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வரும் முன்னர் அங்கு நோட்டம் விட்டுள்ளனர். நேற்றைய நிகழ்வுகளை லலித் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பரப்பியுள்ளார். மற்றவர்களின் போன்கள் அவரிடமே இருந்துள்ளன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையின்போது, அமோல் ஷிண்டே என்ற பெண், மணிப்பூர் பிரச்சினை, விவசாயிகள் போராட்டம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மனம் நொந்து போயிருந்ததால் இவ்வாறாக செய்ததாகக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருமித்த கொள்கையுடன் இருந்ததால் ஒன்றாக இணைந்து அரசாங்கத்துக்கு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க இவ்வாறாகச் செய்துள்ளனர். அவர்கள் தாமாகவே இவ்வாறு செய்தனரா இல்லை யாரோ ஒரு தனிநபராலோ அமைப்பாலோ உந்தப்பட்டு செய்தனரா என்று தீவிரமாக விசாரிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.