கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்தது.
இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்தது. இதனை தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடித்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டின் 4ம் காலாண்டு முதல் (அக்டோபர் 1 – டிசம்பர் 1) வீழ்ச்சி குறியீட்டுடன் ( – மைனஸ்) இருந்தது. குறிப்பாக, 2022 ஏப்ரல் மாதம் இலங்கையின் பொருளாதார குறியீடு -8 என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த சூழ்நிலையில் நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடினார். மேலும், ராஜபக்சே அரசு கவிழ்ந்தது.
பின்னர், 2022 ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதையடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ரணில் தலைமையிலான இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தற்போது மெல்ல மீண்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டின் 3ம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான புள்ளி விவரத்தை இலங்கை அரசு இன்று வெளியிட்டது.
அதில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவிகிதமாக (+ பிளஸ்) அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பின் முதல் முறையாக இலங்கையின் பொருளாதார குறியீடு வளர்ச்சி (+ பிளஸ்) என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.