புதுடெல்லி: மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் தீவிரத்துடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் என்றும் பிரச்சினையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பிரதமர் மோடி ‘டைனிக் ஜாக்ரன்’ என்ற இந்தி ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
“இந்தப் பிரச்சினையை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால் தான் சபாநாயகர் மிகுந்த தீவிரத்துடன் அனைத்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். புலனாய்வு அமைப்புகள் முழுமையான விசாரணை செய்து வருகின்றன.
இந்தச் சம்பவத்தின் பின்னால் இருக்கும் விஷயங்கள் என்ன, என்னென்னத் திட்டங்கள் இருந்தன என்பதுடன் இதற்கு ஒரு தீர்வு காண்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. திறந்த மனதுடன் நாம் தீர்வு காண வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் தவிர்க்க வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: இதனிடையே, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டதற்காக கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து மக்களவையும், மாநிலங்களவையும் முடங்கின.
நடந்தது என்ன?: முன்னதாக நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் திடீரென்று, மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி ஓடி, வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். இவர்களுக்கு ஆதரவாக அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ண புகைக் குப்பிகளை வீசி கோஷமிட்டனர். நாடாளுமன்ற தீவிரவாதத் தாக்குதலின் 22-வது நினைவு தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளி கைது: இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட்டதாகவும் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படும் லலித் மோகன் ஜா வியாழக்கிழமை கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து லலித் ஜா, வெள்ளிக்கிழமை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மகேஷ் குமாவத் டெல்லி போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
செல்போன் பாகங்கள்: இதனிடையே நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரின் செல்போன்களின் உடைந்த பாகங்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்ற இளைஞர் தன் வசம் இருந்த ஐந்து போன்களையும் எரித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லலித் ஜா விசாரணைக் குழுவை குழப்பும் வகையில் பல்வேறு தகவல்களையும் கூறிவந்த நிலையில் எரிந்த நிலையில் ஐந்து போன்கள் கிடைத்துள்ளன.