`டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் முதல் பாகத்தைப் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அருள்நிதி நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் அருள்நிதி, பிரியா பவானிசங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. நடிகை பிரியா பவானிசங்கர், நடிகர் அருண் பாண்டியன், இயக்குநர் அஜய் ஞானமுத்து உட்படப் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் அருண் பாண்டியன், “மிக அற்புதமான படமாக இது உருவாகியிருக்கு. அதே சமயம் எமோஷனலாகவும் இருக்கும். நடிகர் அருள்நிதியோட வேலைப் பார்த்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி” எனப் பேசி முடித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ‘சார்பட்டா’ முத்துக்குமார், “ஒரு விஷயத்தை பண்ணணும்னு இயக்குநர் சொல்லிடுவாரு. அந்தக் கதாபாத்திரத்தோட கன்டன்ட்டுக்கு என்னென்ன தேவைன்னு புரிஞ்சுகிட்டு சில விஷயங்களை நான் பண்ணுவேன். அதை எல்லாத்தையும் இயக்குநர் மாத்திடுவாரு. அவருக்குள்ள ஒரு பயங்கரமான நடிகர் இருக்காரு. இந்தப் படத்துல காமெடி, சென்டிமென்ட்னு எல்லாமே இருக்கு. இது நடிகர் அருள்நிதியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகும்” என்றார்
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், “ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்துக்குதான் அடுத்த இரைக்கு எவ்வளவு கஷ்டப்படணும்னு! இந்தப் படைப்பு கண்டிப்பா பெருசா பெயர் கொடுக்கும். நான் மல்டிப்பிள் புராஜெக்ட்ஸ்ல வேலை பண்றவன். இந்தப் படத்துல வேலைப் பார்க்கும் போது, வேற படத்துல வேலைப் பார்க்கத் தோணல. அஜய் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலமாக சிக்ஸர் அடிப்பாரு. இதுவரைக்கும் இந்தப் படத்துல வேலைப் பார்த்த பிராசஸ் எனக்கு ரொம்பவே திருப்தியாக இருக்கு” எனப் பேசினார்.

நிகழ்வின் இறுதியில் வந்து பேசிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “தாத்தா பெயர்ல தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அப்பாவை அதுல தயாரிப்பாளராக்கனும்னு ஆசைப்பட்டேன். இந்த படத்தின் மூலமாக ‘ஞானமுத்து பட்டறையை’ ஆரம்பிச்சிருக்கேன். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ஒரு படத்தை இயக்குபவராகவே பார்ப்பார். எங்க அப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். எனக்கு இடது கைல அதிக தடவ முறிவு ஏற்பட்டிருக்கு. கைல அடிப்பட்ட அடுத்த நாளே ஸ்கூலுக்கு போகணும்னு சொல்லுவாரு. அதுக்கு அர்த்தம் ‘அடிப்பட்டா படுத்து தூங்கணும்னு கிடையாது. எழுந்து ஒடணும்’னு சொல்வார்.
‘கோப்ரா’ படத்தோட விமர்சனங்களுக்குப் பிறகு நான் கொஞ்சம் ஓய்வு எடுக்குறேன்னு இருந்தேன். அப்போதான் அருள்நிதி வந்து ‘இதுக்கெல்லாம் டவுன் ஆகி உட்கார்ந்தா எப்படி’ன்னு கை கொடுத்தார். எனக்கு கை கொடுக்க அந்தச் சமயத்துல ஆள் தேவைப்பட்டாங்க. விழுந்த கொஞ்ச நேரத்திலேயே அருள்நிதி கை கொடுத்தார். இந்தப் படத்தை முதல்ல என்னோட துணை இயக்குநர்தான் பண்றதாக இருந்தது. ‘போன படத்தோட ரிலீஸ் சரியாக இல்லாததால இந்தப் படம் என்னையும் தாண்டி உங்களுக்குதான் இப்போ தேவை’ன்னு அருள்நிதி சொன்னார். என்னோட துணை இயக்குநர்கள் எல்லாம் என்னோட சகோதரர்கள் மாதிரி!” எனப் பேசினார்.