தாவூத் இப்ராகிமுக்கு என்னாச்சு..? வலைத்தளங்களில் பரவும் ட்வீட் உண்மையா?

கராச்சி:

இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாவூத் இப்ராகிம் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தாவூத் இப்ராகிமுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் இறந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

தாவூத் மறைவு தொடர்பாக, பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் காகரின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாக கூறி, ஸ்கிரீன்ஷாட்டை சிலர் பகிர்ந்தனர். அந்த ஸ்கிரீன்ஷாட்டில், மர்ம நபர் விஷம் கொடுத்ததில் தாவூத் இப்ராகிம் இறந்துவிட்டதாகவும், கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரீன்ஷாட் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், பல்வேறு உண்மை சரிபார்ப்பு அமைப்புகள் இந்த விஷயத்தை ஆழமாக ஆராய்ந்ததில், அந்த எக்ஸ் கணக்கு பாகிஸ்தான் இடைக்கால பிரதமரின் கணக்கு அல்ல என்பது தெரியவந்தது. தாவூத் மறைவு தொடர்பான ட்வீட்டும் போலி என்பது தெரியவந்தது.

வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள பயனர் பெயர் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் காகரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குடன் பொருந்தவில்லை என, உண்மை சரிபார்ப்பு இணையதளம் டி.எப்.ஆர்.ஏ.சி. தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.