திருநெல்வேலி: தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (டிச.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மீட்பு பணிக்காக நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களில் இருந்து 30 நாட்டுப் படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப் படகுகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக 30 நாட்டுப்படகுகள் மீனவ கிராமங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு இவற்றை அனுப்பி வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளான கூட்டப்புளி, கூடங்குளம், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் இப்பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு பொருட்களை சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு வழங்கினார். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த கூட்டப்புளி, உவரி மீனவர் கிராமங்களில் இருந்து 30 நாட்டுப்படகுகளும், ஒரு படகுக்கு 5 மீனவர்கள் வீதம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல்வேறு சாலைகளும் துண்டிப்பு: திருநெல்வேலியில் பெய்த அதிகனமழையாலும், வெள்ளத்தாலும் பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அச்சாலைகள் விவரம்: திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- தூத்துக்குடி, திருநெல்வேலி- கோவில்பட்டி சாலை தச்சநல்லூரில் துண்டிப்பு, திருநெல்வேலி புதிய பேருந்துநிலையம்- அம்பாசமுத்திரம் சாலையில் முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு, பேட்டை – பழைய பேட்டை இணைப்பு சாலை, திருநெல்வேலி டவுன்- சேரன்மகாதேவி சாலை, முக்கூடல்- கடையம் சாலை, இடைகால்- ஆலங்குளம் சாலை, அம்பாசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி சாலையில் வெள்ளங்குளியில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம்: திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் வெள்ளம் புகுந்ததால் அலுவலர்களும், பணியாளர்களும் அங்கு பணிக்கு செல்ல முடியவில்லை.கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றுப்பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு பாய்ந்ததால் ஆட்சியர் அலுவலகத்தினுள் வெள்ளம் புகுந்தது. இங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததால் அங்கு அலுவலர்களும், ஊழியர்களும் பணிக்கு செல்ல முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள் மாற்றம்: திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் அங்கு செயல்பட்டுவந்த கட்டுப்பாட்டு அறை எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆட்சியர் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் தற்போது செயல்பாட்டில் இல்லாததால் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 9384056217, 9629939239 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 24 கர்ப்பிணி பெண்கள் சேர்ப்பு: இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதியுள்ள 696 கர்ப்பிணி பெண்களை தொடர்பு கொண்டு மருத்துவமனைகளில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதியுள்ள 24 கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனின் இந்த நடவடிக்கைக்கு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.