வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
எங்கள் குடும்பம் சென்னையிலிருந்து கோவைக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. கோவை ஒரு அமைதியான நகரம் என முன்பே தெரியும் . அதனாலேயே தனிவீடு இல்லாமல் நிறைய வீடுகள் இருக்கும் ஒரு குடியிருப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஃப்ளாட்டில் உள்ள மனிதர்கள் பேசுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.
எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக இருக்கிறது இந்த இடம். எங்கும் அமைதி , எதிலும் அமைதி. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும், மனிதர்கள் இருக்கிறார்களா? என்ற அளவில் அமைதிப் பூங்காவாக இருக்கிறது எங்கள் குடியிருப்பு.

நானும் காலை , மாலை என இருவேளைகளிலும் குடியிருப்பைச் சுற்றி காலாற நடந்து வந்தால் , யாராவது கண்ணிற்குத் தென்படுவார்கள், பேசலாம் என்றெண்ணி தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறேன். ஆனால் swiggy, Zomato ஆட்களைத் தவிர யாரையும் பார்க்க முடிவதில்லை. அப்படியே வந்தாலும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருக்கிறார்கள்..உள்ளே இருக்கும் முகங்கள் தெரிவதில்லை. சரி , பதினான்கு வீடுகள் இருக்கும் எனது தளத்திலாவது யாரையாவது பார்த்துப் பேசலாம் என சில சமயங்களில் எனது தளத்தைச் சுற்றி சுற்றி நடந்து பார்த்தேன்.அனைத்து வீடுகளின் கதவுகளும் மூடியே கிடக்கின்றன.
மதியம் என் வீட்டில் வேலை செய்யவரும் பெண்மணி மட்டுமே தற்போதைக்கு என்னுடன் பேசுபவள்..மற்றபடி முற்றிலும் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை தான் என்னுடையது.
என்னதான் வாட்ஸ்ஆப்பில் கனடா, லண்டன் , சிங்கப்பூர், அமெரிக்க, ஆப்ரிக்கா நட்புகளுடன் சில மணித்துளிகள் சேட்டிங் மூலம் பேசிக் கொண்டிருந்தாலும், உள்ளூர் வாசிகளுடன் நேருக்கு நேராக நின்று நட்புடன் சில மணித்துளிகளாவது பேசினால் தான் எனக்கு அன்றைய பொழுது நிறைவடையும்..
பேசுவதற்கு நட்பு ரீதியாக நபர்கள் இல்லாமல் , முதலில் நாட்கள் சற்று மந்தமாகவே சென்றபோதும், இந்த அமைதி மெல்ல மெல்ல பழக ஆரம்பித்திருக்கிறது.

கீழே இறங்கி நடக்கையில், இங்கே வேலை செய்யும் பெண்மணிகள் என்னைப் பார்த்து , நடக்க ஆரம்பிச்சுட்டீங்களா? என்று சிரித்தபடியே கேட்பதே போதுமானதாக இருக்கிறது.
குடியிருப்பின் வாசலில் ஒரு அழகான புத்தர் சிலை வைத்திருக்கிறார்கள். மாலை ஆறுமணிக்கு மேல் அதனருகே வண்ண விளக்குகளை எரிய விட்டு , அந்த இடமே அழகானதாக இருக்கும்.. புத்தரின் சிலைகளை வீடுகளில் வைப்பதென்பது தற்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது. முன்பெல்லாம் விநாயகரின் சிலைகளை வைத்து விடுவார்கள்.. அந்த இடம் கோவில் போல இருக்கும் . குடியிருப்பில் இருக்கும் அந்தச் சின்னஞ்சிறு கோவிலுக்குச் சென்று சிறிது நேரம் நின்றுவிட்டு வந்தாலே மனம் புத்துணர்வு பெறும்.
ஆனால் புத்தர் வைத்திருக்கும் இடங்களில் கோவில் போன்ற ஓர் உணர்வு வருவதில்லை எனக்கு. அவர் கடவுளா,? இல்லை துறவியா? என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டால் , அவர் துறவி, ஞானி என்ற பதில்களையே என் மனம் ஏற்றுக் கொள்ளும்.
எப்பேர்ப்பட்ட போதனைகளை அவர் மானுடத்திற்கு அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார்! . அவரின் சில போதனைகளை பின்பற்றினால் கூட நம் வாழ்க்கை மாற்றத்தைக் கண்டடையும். ஆனால் நமக்கு அவரின் உருவங்களை வீட்டில் வைத்து அழகு பார்க்கத் தெரியுமே தவிர, அவரது கருத்துக்களை உள்வாங்கத் தெரியாது..

சரி, மனிதர்களைப் பார்த்து பேசமுடியாவிட்டால் என்ன? தினமும் புத்தருக்கு ஒரு வணக்கத்தைச் சொல்லி அவரிடமாவது பேசலாமே என தினமும் அவரிடம் சென்று நின்று கொண்டிருப்பேன். நான் வருவது அவருக்குத் தெரிந்துவிடுமோ என்னமோ? நான் அவரருகில் சென்று நிற்கும் முன்பாகவே, தியான நிலைக்குச் சென்று கண்களை மூடிக் கொண்டு விடுகிறார்..
என்றைக்காவது ஒரு நாள், அவர் கண்களை திறந்து என்னோடு உரையாடுவார் என்ற நம்பிக்கையில் தினமும் நான் நடைப்பயிற்சி செய்தபடியே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
ஒருவேளை அவர் கண்களை திறக்க மறுத்தால், கண்கள் திறந்தபடி இருக்கும் புத்தர் சிலையை இனிமேல் இந்த இடத்தில் வைத்துவிடுங்கள் என ஃப்ளாட் அசோசியேஷனுக்கு ஒரு மெயில் அனுப்பி விடப்போகிறேன்.. எதுவுமே புத்தர் கைகளில், இல்லை இல்லை , கண்களில் தான் உள்ளது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.