சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் “தங்கமான யோசனை 2023” பரிசுளிப்பு நிகழ்வு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் சிறு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பாடசாலை மட்டத்திலிருந்தே சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களிடையே “தங்கமான யோசனை 2023” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது.

மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே
“வணிக உலகத்தில் முன்னேறிச் செல்லும் நான்”,
“எதிர்காலத்தை வெல்லும் எங்கள் கிராமத்தில் உள்ள வணிகங்கள்” மற்றும்
“படைப்பாற்றலால் உலகை வெல்வோம்”
எனும் தலைப்புக்களில் கட்டுரை ஆக்கம் மற்றும் சித்திரப் போட்டிகள் மாணவர்கள் மத்தியில் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தங்கமான யோசனையைத் தெரிவு செய்யும் நோக்கில் நடாத்தப்பட்டன.

இப்போட்டி நிகழ்ச்சியில் கனிஷ்டப் பிரிவில் தரம் 9 முதல் 11 வரையான மாணவர்களும் சிரேஷ்ட பிரிவில் தரம் 12 மற்றும் 13 மாணவர்களும் கலந்து கொண்டு தமது சிறு தொழில் முயற்சிக்கான தங்கமான புதிய முயற்சியாண்மைக்கான யோசனைகளை கட்டுரைகளாகவும் சித்திரங்களாகவும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர் எம். எஸ். பஸீர், மாவட்ட செயலக கணக்காளர் எம். விநோத், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் லக்ஷனியா பிரஷாந்த், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் உட்பட மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் ரி. நிலோஷன், வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

இப்பரிசளிப்பு நிகழ்விற்கான சான்றிதழ்கள், பரிசில்களை மட்டக்களப்பு மாவட்ட அழகுக் கலை நிபுணர்கள் சங்கம், உள்ளை மீனாஸ் உல்லாசப் பயணிகள் விடுதி என்பன வழங்கி அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.