தூத்துக்குடி வெள்ளம்: இதுவரை கண்டுகொள்ளப்படாத கிராமம்… கவலையில் ஊர் மக்கள்!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றுமுதல் வெள்ளம் வடியத்தொடங்கியிருக்கிறது. இருப்பினும், வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் உடைந்து பல்வேறு பகுதிகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இருப்பது, தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் சென்னல்பட்டி.

சென்னல்பட்டி

நெல்லை – தூத்துக்குடி மாவட்ட எல்லையில் இருக்கும் இந்த கிராம மக்கள், கனமழையில் சிக்கித் தவித்த நிலையில், சமயோசிதமாக யோசித்த கிராமத்து இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து கயிறு கட்டி மக்களை வெள்ளத்திலிருந்து மீட்டு, மேடான பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதேசமயம், கிராமத்தில் 15 வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சரிந்தன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், கிராம மக்கள் வேதனையில் இருக்கின்றனர். அதோடு, விளை நிலங்களில் வெள்ளம் பாய்ந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய கிராமத்து இளைஞரான சூர்யா, “எங்கள் ஊர் தூத்துக்குடி – நெல்லை மாவட்ட எல்லையில் இருக்கிறது. எங்கள் ஊருக்கு மழை எச்சரிக்கை எதையும் அதிகாரிகள் கொடுக்கவில்லை. சனிக்கிழமை மழை பெய்யத் தொடங்கியதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இரவு முழுவதும் மழை பெய்ததால் ஊருக்குள் வெள்ளம் வரத் தொடங்கியது.

சூர்யா – சென்னல்பட்டி கிராமம்

கூடவே, அருகிலுள்ள கிராமத்தின் குளங்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் வந்ததோடு, தாமிரபரணி ஆற்று நீரும் ஊருக்குள் வரத் தொடங்கியது. நிலைமை கைமீறிப் போன நிலையில், ஊரின் இரு பக்கமும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் உடைந்ததால், எங்கள் கிராமமே தனித்தீவாக மாறியது. ஊருக்குள் வெள்ளம் அதிகரிக்கத் தொடங்கியதால், மக்கள் மாடி வீடுகளுக்குச் சென்றார்கள். பல வீடுகள் இடிந்தன.

தண்ணீர் அதிகரித்ததால் ஊரிலுள்ள 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து கயிறு கட்டி மக்களைக் காப்பாற்றினோம். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைக் கட்டிலில் அமரவைத்துத் தூக்கிச் சென்றோம். ஆடுகளையும் தோளில் சுமந்து காப்பாற்றினோம். தற்போது வெள்ளம் வற்றிய பிறகும்கூட யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை. உணவு, தண்ணீர் இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம்” என்றார்.

சென்னல்பட்டி

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களும் பாத்திரங்களும் அடித்துச் செல்லப்பட்டதால், உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்குப் பால் ஆகியவை கிடைக்காமல் தவிக்கிறார்கள். அதேசமயம், ஆபத்தான வெள்ளத்திலிருந்து தங்களைக் காத்த கிராமத்து இளைஞர்களைப் பெருமிதத்தோடு பாராட்டுகின்றனர், கிராம மக்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.