புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்குபேட்டர் அறை, ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்குபேட்டர் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவ்லாக் ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்கண்ணு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் தெங்கால், அவரக்கரை, மணியம்பட்டு மற்றும் புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனை, பிரசவம், மகப்பேறு பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், காய்ச்சல் உட்பட நோய்களுக்கு சிகிச்சை பெறவும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டு உள்ள அறையில் தரையில் பதிக்கப்பட்டுள்ள ‘டைல்ஸ்’ பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், பிரசவத்துக்காக பயன்படுத்தப்படும் இரும்பு கட்டிலின் கால்கள் தரையில் நிற்காமல், ஆடும் நிலையில் உள்ளன. மேலும், இங்குள்ள குன்குபேட்டர் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அங்கு, கண்ணாடிக்கு பதிலாக அட்டைகளை வைத்து மறைத்து வைத்து, ஜன்னலை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “காய்ச்சல், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுபவர்கள் கூட பரவாயில்லை. பிரசவ அறை மற்றும் இன்குபேட்டர் அறையை முறையாக பராமரிக்க வேண்டும்.

பிரவச வார்டில் தரை பெயர்ந்துபழுதாகி காணப்படுகிறது.

ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை கண்ணாடிகள் மாற்றப்படவில்லை. மருத்துவமனைக்காக மாதம், மாதம் அடிப்படை வசதிகளுக்காகவும், பழுதுகளை சரி செய்யவும் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதை என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மருத்துவமனை வளாகத்தில் சமூக விரோத கும்பல்கள் மது அருந்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி மருத்துவமனையை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவ சுகாதாரப் பணிகள் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘உடைந்த கண்ணாடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டிடத்துக்கு அருகே, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. விரைந்து அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.