சென்னையில் கொட்டிய கனமழையைப்போலவே, தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை, விடாமல் பெய்ததால் பல மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்த நிலையில், டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இந்த சூழலில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு அதிகாரிகளுடன் தென்மாவட்ட புயல், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அது தொடர்பாக ராஜ் பவன் ட்விட்டர் பதிவில், “மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளைச் சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் ஆய்வு செய்தார்.
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பி.எஸ்.என்.எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை. மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது.

மத்திய அரசுத்துறைகள், அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன. மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின் படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றன.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாகக் கவலை தெரிவித்தன. தற்போதுள்ள மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களைக் கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக் கூட்டம் தொடர்பாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கொரோனா காலத்தில் பிரதமர் தான் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருந்தால் என்ன எதிர்வினை வந்திருக்குமோ அதே தான் எனது எதிர்வினை” எனப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.