Myanmar armed forces capture town on Chinese border | சீனாவின் எல்லையில் நகரத்தை கைப்பற்றிய மியான்மர் ஆயுதக்குழு

பாங்காக், சீன எல்லையில் உள்ள முக்கிய நகரத்தை, மியான்மரின் இனப்போராட்ட ஆயுதக் குழு கைப்பற்றியுள்ளதால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி, 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

இருப்பினும், அதற்கு அடுத்த ஆண்டே, தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ஆட்சியை கவிழ்த்த ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது.

இதையடுத்து, பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பரவலாக ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

அங்குள்ள இனப்போராட்ட ஆயுதக் குழுக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கோகாங் இன மக்களின் மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி ராணுவம், மேலும் இரு புரட்சிக் குழுக்களான அராக்கன் ராணுவம், தாங் தேசிய விடுதலை ராணுவம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

நம் நாட்டின் எல்லை பகுதியை ஒட்டியுள்ள சில பகுதிகளை, கடந்த மாதம் இந்தக் குழு கைப்பற்றியது. இந்நிலையில், ஷான் மாகாணத்தின் வடக்கு பகுதியில், சீன எல்லையில் அமைந்துள்ள லாக்கைங் டவுன்ஷிப்பை இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இணையதளம் தொடர்பான பல்வேறு சைபர் குற்றங்களுக்கு பெயர் பெற்ற இந்த பகுதியில், வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில் இனப் போராளிகள் குழு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர் மற்றும் சீனா இடையிலான முக்கியமான வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட பகுதிகள், இனப் போராளிகள் குழுவால் கைப்பற்றப்பட்ட நிலையில், லாக்கைங் பகுதியில் அவர்களின் கை ஓங்கி உள்ளது, இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மியான்மரில் சண்டை நடக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக சர்வதேச மனித உரிமை குழுவினரால், மீட்புப் பணிக்காக அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.