துப்பாக்கிமுனையில் பணப் பறிப்பு; சோளக்காட்டுக்குள் நுழைந்து தப்பியோட்டம்! – மூவரைத் தேடும் போலீஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சாமராயபட்டியில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேல். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாக்கு விவசாயம் செய்து வருகிறார். இங்கு விளையும் பாக்குகளை, கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த முஸ்தபா (52) என்பவர், வேன் மூலம் வியாழக்கிழமை இரவு எடுத்துச் சென்றுள்ளார். இவரது வாகனம், உடுமலை அருகே உள்ள மலையாண்டிகவுண்டனூர் நால்ரோடு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், முஸ்தபாவின் வேனை வழிமறித்துள்ளனர். வேனை ஓட்டுநர் நிறுத்தியபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர் ஓட்டுநரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, ரூ.3,000 பணம் மற்றும் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

கொள்ளை

இதுகுறித்து உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமாறன் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலுவின் தோட்டத்திலிருந்து முஸ்தபா பாக்குகளை கேரளத்துக்குக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வியாழக்கிழமை வழக்கம்போல் பாக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போதுதான், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஏர் கன் வகை துப்பாக்கியை வைத்து ஓட்டுநரை மிரட்டி பணத்தையும், செல்போனையும் பறித்துள்ளனர்.

போலீஸ்

அப்போது, அவ்வழியே வந்த சிறப்பு அதிரடிப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர், கொள்ளையர்களை விரட்டியுள்ளார். அதில், துப்பாக்கியைப் போட்டுவிட்டு இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர். ஒருவர் அருகில் இருந்த சோளக்காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார். பொதுமக்கள் உதவியுடன் சோளக்காட்டுக்குள் தப்பியோடியவர்களைத் தேடியும், அவர்கள் தப்பிவிட்டனர். இது தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் மூவரும் கைதுசெய்யப்படுவார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.