“பேரிடரில் உடனடி தேவை ‘உதவி’… உபதேசம் அல்ல” – நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் பதில்

சென்னை: “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டி வந்திருக்க வேண்டியது தானே? ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க? என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், மீட்புப் பணிகளை பொறுத்தவரை மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து களத்தில் பணிபுரிந்தன. இதனால் தான் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே சார்பில் மீட்கப்பட்டனர். தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை.

உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மழை, வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. எனவே, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், மாநில அளவில் எடுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் ‘மாநிலப் பேரிடர்’ என அறிவிக்க முடியும். மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசு பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் மாநில அரசின் பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை அந்த பேரிடருக்கு பயன்படுத்தவும் முடியும்.

தமிழக அரசு வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.6000 அளிப்பதில் நான் எதுவும் சொல்ல முடியாது. அது தமிழக அரசின் விருப்பம். ஆனால் கொடுக்கின்ற பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் கொடுத்திருக்கலாம். அரசு பணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்க வேண்டும். ரொக்கமாக கொடுத்தால், அது யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதில் கணக்கு வைக்க முடியாது. ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத் தன்மை இருந்திருக்கும் என்று அவர் கூறியிருந்தார். முழுமையாக வாசிக்க > தென்மாவட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது?- நிர்மலா சீதாராமன் கேள்வி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.