நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் இருக்கிறது மேல்தட்ட பள்ளம். இங்குள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில், 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்றை கடந்த வாரம் சுருக்கு வைத்துக் கொன்று, நகங்களுக்காக அவற்றின் மூன்று கால்களை வெட்டிச் சென்றுள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட வேட்டையாளர்களை கண்டறியும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டி நகருக்கு அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் சிறுத்தை ஒன்று தடுப்பு வேலியில் சிக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று மாலை தகவல் வந்துள்ளது. குழுவுடன் சென்ற வனத்துறையினர், அந்த சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி தவிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக வனக் கால்நடை மருத்துவரை வரவழைத்து, அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சுருக்கிலிருந்து மீட்டுள்ளனர். இருப்பினும் பல மணி நேரமாக சுருக்கில் சிக்கித் தவித்த அந்த சிறுத்தையின் உடல் பாகங்கள் செயலற்ற நிலையில் இருந்துள்ளது. ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனத்திற்குள் விடுவிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தது.
கடந்த வாரம் கோத்தகிரியில் சிறுத்தை சுருக்கு வைத்து கொல்லப்பட்டு கால்களை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சியாக ஊட்டி நகருக்கு அருகிலேயே சிறுத்தை ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “வனவிலங்குகள் நிறைந்த நீலகிரியில் அவற்றின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. வனவிலங்குகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. உடனடியாக இவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அரிய வகை உயிரினங்களை முற்றாக இழக்க நேரிடும் ” என எச்சரித்தனர்.
சிறுத்தை இறப்புக் குறித்து நீலகிரி வனத்துறை அதிகாரிகள், “சிறுத்தை ஒன்று தடுப்பு வேலையில் சிக்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்தோம். ஆனால், இரு சக்கர வாகனத்தின் க்ளட்ச் கேபிள் வயரை பயன்படுத்தி சுருக்கு வலை வைத்திருக்கிறார்கள். சுமார் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இந்த சுருக்கில் சிக்கியிருக்கிறது.

சுருக்கிலிருந்து தப்பிக்க போராடிய சிறுத்தையின் உள் உறுப்புகள் செயலிழந்துள்ளது. சிகிச்சை அளிக்க முயற்சித்தும் பலனின்றி இறந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுருக்குவலைகளை கண்டறிந்து அகற்றுவதுடன் இந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.