தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த ஊர்வலத்தின்போது பெருமாள் சிலை கவிழ்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னாகரம் அடுத்த அளேபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில், வைகுண்ட ஏகாதசி தினமான இன்று (டிச.23) அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதர் பெருமாள் உற்சவர் சிலை சொர்க்க வாசல் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாறு ஊர்வலம் எடுத்துச் சென்ற பல்லக்கில் சாமி சிலைகளை முறையாக கட்டாமல் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கோயில் வளாகத்தில் சற்று தூரம் ஊர்வலம் சென்று நிலையில், உற்சவர் சிலைகள் பல்லக்கில் இருந்து தலைக்குப்புற கீழே விழுந்தன.
கோயில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சிறு ஆலோசனைக்குப் பிறகு சிலைகள் மீண்டும் பல்லக்கில் ஏற்றப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தி ஊர்வலம் தொடரப்பட்டது.