கத்தார் நாட்டில், தஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் அக்டோபர் 26-ம் தேதி எட்டு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அனைத்துச் சட்ட வழிகளையும் ஆராய்வதாகத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கத்தார் அரசிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்தது.

பின்னர், இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு கத்தார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்தியர்கள் எட்டு பேரின் மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தஹ்ரா குளோபல் வழக்கில் கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம், அதில் தண்டனைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. விரிவான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். கத்தாருக்கான எங்கள் தூதர் மற்றும் பிற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் அவர்களுக்கு (சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்) நாங்கள் ஆதரவாக இருந்தோம். மேலும், அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவதோடு, கத்தார் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்று கூறப்பட்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதுபோல், விரிவான தீர்ப்பு வெளிவந்த பிறகு, எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.