விஜயகாந்த் உயிரிழப்புக்கு காரணமான நுரையீரல் அழற்சி: யாருக்கெல்லாம் வரும், தீர்வு என்ன?

மார்கழி மாத பனியும், அவ்வப்போதைய திடீர் புயல் மழைகளும் ஆஸ்துமாவுக்கான அபாயத்தை இன்று அதிகரித்துள்ளது. இத்துடன் எப்போதும் நிலவும் காற்று மாசுவும் நுரையீரல் தொடர்பான அழற்சியைத் தீவிரமாக வைத்துள்ளது.

தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உயிரிழப்புக்கும் நுரையீரல் அழற்சி காரணம் என்று மருத்துவமனை அறிக்கை உறுதிசெய்திருக்கிறது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்…

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

நுரையீரல் அழற்சி என்பது என்ன?

உடலுக்கு எதிரான அல்லது உடலால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு மருத்துவ ஒவ்வாமையைத்தான் அழற்சி (Allergy) என்கிறோம். இந்த ஒவ்வாமை, நுரையீரல் தொடர்பாக வரும்போது அதற்கு Lung allergy என்று பெயர்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்…

நுரையீரல் அழற்சி என்பது சுவாசம் தொடர்பான காரணங்களால் வருகிறது. அதாவது நமது மூக்கு, தொண்டைப்பகுதி மற்றும் நுரையீரல் பகுதி வரையில் ஏற்படும் ஒவ்வாமை, நுரையீரல் அழற்சியாகும். இதில் பல்வேறு வகைகள் உள்ளன. நாம் பொதுவாகப் புரிந்துகொள்ள வேண்டியது தொண்டைக்கு மேற்பகுதியில் வருவது Allergic rhinitis. தொண்டைப்பகுதிக்கு கீழ் வருவது மூச்சுக்குழாய்களின் சுருக்கத்தால் வரும் ஆஸ்துமா.

நுரையீரல் ஒவ்வாமை யாருக்கு வரும்?

காற்றின் மூலமோ, உணவின் மூலமோ அல்லது சருமத்தின் மூலமோ அழற்சியை உண்டாக்கும் காரணிகளை எல்லோரும் சந்திக்கிறோம். ஆனால், ஒவ்வாமை அபாயம் கொண்டவர்களின் உடலில் மட்டுமே எதிர்வினை நிகழ்கிறது.

இதேபோல் எல்லோருக்குமே நுரையீரல் ஒவ்வாமை வருவதில்லை. மரபுரீதியிலான காரணிகள் கொண்டவர்கள், நுரையீரல் பிரச்னை குடும்ப பின்னணி கொண்டவர்களே நுரையீரல் ஒவ்வாமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மற்றவர்களுக்கு ஒவ்வாமை வரும் வாய்ப்புகள் குறைவு.

நுரையீரல்

அழற்சியை எப்படித் தவிர்ப்பது?

எந்தக் காரணத்தால் ஒருவருக்கு நுரையீரலில் அழற்சி ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒருவருக்கு பூக்களின் மகரந்தம் ஒவ்வாமையை உண்டாக்கலாம். சிலருக்கு செல்லப் பிராணிகளால் ஒவ்வாமை உண்டாகலாம். எனவே, காரணம் அறிந்து அத்தகைய சூழலைத் தவிர்க்க வேன்டும்.

நுரையீரல் அழற்சிக்குப் பொதுவான காரணிகள் என்ன?

அழற்சியானது உள்புற காரணிகள் (Indoor) , வெளிப்புற காரணிகள் (Outdoor) என இரண்டு விதமாக ஏற்படலாம்.

பூக்களின் மகரந்தம், செல்லப்பிராணிகளின் ரோமங்கள் அல்லது இறகுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டடை, தூசு, படுக்கையில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், சாம்பிராணி புகை, வாகனப்புகை, காற்று மாசு போன்றவை அழற்சியை உண்டாக்கலாம்.

சிலருக்கு காளான், நிலக்கடலை, மீன் வகை உணவுகளால் அழற்சி (Food allergy) ஏற்படும். உடனடியாக உதடு வீங்குவதிலிருந்து மூச்சுத்திணறல் வரையிலான பிரச்னையை உண்டாக்கும்.

சிலருக்கு பருவநிலை மாற்றம் நுரையீரல் அழற்சியை உண்டாக்கும். குளிரான சீதோஷ்ணம் சிலரை சிரமப்படுத்தும்.

நுரையீரல் அழற்சி அலட்சியம் தவிர்ப்போம்!

நுரையீரல் அழற்சியின் அறிகுறிகள் என்ன?

நுரையீரல் அழற்சியில் பல வகைகள் இருந்தாலும் பொதுவான நுரையீரல் அழற்சியாக நாம் குறிப்பிடுவது ஆஸ்துமாவைத்தான். மூச்சுத்திணறல், சளி, மூச்சுவிடும்போது விசில் போன்ற சப்தம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

சிகிச்சைகள் என்னென்ன?

நுரையீரல் அழற்சிக்கான அறிகுறிகளை உணர்ந்த பிறகு ENT மருத்துவர், நுரையீரல் மருத்துவர், அலர்ஜி மருத்துவர் என யாரையேனும் அணுகி, பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும். அதன்பிறகு கொடுக்கிற மருந்துகளை முறையாக உட்கொள்ள வேண்டும். இன்ஹேலர் பயன்படுத்தச் சொன்னால் பயன்படுத்த வேண்டும். தயங்கக் கூடாது. சாதாரணமாக மாத்திரையாக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துகிறவர்கள் கூட இன்ஹேலர் பயன்படுத்த தயங்குகிறார்கள். இது தவறான அணுகுமுறை. மேலும் அழற்சியின் தன்மைக்கேற்ப இம்யூனோதெரபி மற்றும் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

 தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உயிரிழப்புக்கு நுரையீரல் அழற்சி காரணம் என்று செய்திகள் வந்தனவே…

விஜயகாந்தின் உடல்நிலை மற்றும் அவரின் மருத்துவத்தரவுகள் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது. எனவே, அதுபற்றி விரிவாக நம்மால் கருத்து கூற முடியாது. சிறுநீரகப் பிரச்னை விஜயகாந்துக்கு இருந்ததாகத் தெரிகிறது. இத்துடன் Comorbidity என்கிற இணைநோய்கள் கூட்டாக இருந்துள்ளதாகவும் கேள்விப்படுகிறோம். எனவே, கொரோனா தொற்று அல்லது நுரையீரல் அழற்சி என்பது பல கூட்டுக்காரணிகளில் ஒன்றாகவே இருக்கக்கூடும்.

– ஜி.ஸ்ரீவித்யா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.