112 ஆண்டுகளாகத் தொடரும் பவானீஸ்வரர் பந்தம்; தோடர் பழங்குடி மக்களின் ஆருத்ரா தரிசனம்!

ஆண்டுதோறும் மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டி, பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள பவானீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரேஷ்வரி ஆருத்ரா தரிசன மகோற்சவம் கோலாகலமாக நடைபெறும்.

தோடர் பழங்குடி ஆருத்ரா

ஆருத்ரா தரிசன மாகோற்சவத்தை முன்னிட்டு டிசம்பர் 27 ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு கணபதி மற்றும் சூரிய பகவான் பூஜை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமமும் மாலை 4.30 மணிக்கு பூர்ணஹூதி, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் மற்றும் மங்களஇசை ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலை 6 மணியளவில் பவானீஸ்வரர் கோயிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. தேருக்கு முன்பு நீலகிரி வாழ்ந்துவரும் பூர்வீக பண்டைய பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பர்ய உடையில் நடனமாடித் தேரை இழுத்து வந்தனர்.

தோடர் பழங்குடி ஆருத்ரா

பாறை முனீஸ்வரர் அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தேர் பவனியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

அங்கிருந்து மீண்டும் தொடங்கிய தேர் பவனி, மெயின் பஜார் வழியாக ஐந்து லாந்தர் பகுதியை அடைந்தது. அங்குள்ள ஊட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தோடர் பழங்குடி ஆண்கள் தங்களின் பாரம்பர்ய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாகத் தேர் பவனி மீண்டும் ஆலயத்தை அடைந்தது. விழா ஏற்பாடுகளை பவானீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்பது குறித்து நம்மிடம் பகிர்ந்த தோடர் பழங்குடிகள், “காலங்காலமாக நீலகிரி மண்ணில் வாழ்ந்து வரும் பூர்வ குடிகளான நாங்கள், ஊட்டியில் அமைந்துள்ள பவானீஸ்வரர் ஆலய ஆருத்ரா தரிசனத்தில் 112 ஆண்டுகளாகப் பங்கேற்று வருகிறோம்.

தோடர் பழங்குடி ஆருத்ரா

அப்போதைய கோயில் அறங்காவலருக்கும் எங்களுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. 1910- ம் ஆண்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் எங்கள் முன்னோர்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடித் தேர்பவனியைத் தொடங்கினார்கள். 112 – ஆண்டுகளாக இந்த பந்தம் தொடர்கிறது மேலும் பல நூறு ஆண்டுகள் இந்த பந்தம் தொடரும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.