ஒரே நாளில் 122 ஏவுகணைகள்.. 36 டிரோன்கள்.. உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நடத்திய ரஷியா

கீவ்:

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபடுகிறது. இதில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள், ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் ரஷிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துகின்றனர். எனினும், பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

அவ்வகையில், நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது, 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன. பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ் உட்பட 6 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இது, 2022 பிப்ரவரியில் ரஷியா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவின் 87 ஏவுகணைகள், 27 டிரோன்களை உக்ரைன் படைகள் இடைமறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, இதற்கு முந்தைய மிகப்பெரிய தாக்குதல் நவம்பர் 2022 இல் ஒருநாள் நடந்துள்ளது. அப்போது, ரஷியா 96 ஏவுகணைகளை வீசி தாக்கியது. இந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி 81 ஏவுகணைகளை ஏவியதே அதிகபட்சம் என உக்ரைன் விமானப்படை கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.