கலைஞர் 100: விஜய், அஜித் பங்கேற்கிறார்களா? – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி விளக்கம்

திரையுலகமே திரண்டு கொண்டாடவிருக்கும் கலைஞர் 100 விழா, நெருங்கி வருவதால், விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தமிழ்த் திரைப்பட சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து, கலைஞர் 100 விழாவைக் கொண்டாட உள்ளது.

இவ்விழா வருகிற 6ம் தேதி, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. விழாவிற்கான மேடை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி அன்றே தொடங்கிவிட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர்கள் பேரரசு, லிங்குசாமி , நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், சுவாமிநாதன் என அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கமல், கருணாநிதி

அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடுவதால், கமல், ரஜினி உட்பட திரையுலகமே திரண்டு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா, 6ம் தேதி என்பதால் ஜனவரி 5, 6ம் தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யபடுகின்றன.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமியிடம் பேசினேன்.

உதயநிதியுடன்.. முரளி ராமசாமி

”கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகம் நடத்தும் பிரமாண்ட விழா இது. அனைத்து சங்கத்தினரும் இணைந்து கொண்டாட உள்ளதால், எல்லோருமே நல் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ரஜினி சார், கமல் சார் உள்பட நட்சத்திரங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. பிற மாநிலத்தில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில் அரசியல் கலப்பில்லாமல் முழுக்க முழுக்க சினிமா விழாவாக மட்டுமே எடுக்கின்றோம். விஜய் சாரிடமும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். விழாவிற்கு அவரும் வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் போல, அஜித் சார் துபாயில் இருப்பதால் அவரின் மேலாளரிடம் அழைப்பிதழ் கொடுத்து, தகவலும் சொல்லியிருக்கிறோம். கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திறந்த வெளியில் விழா நடைபெறுவதால், போதுமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.” என்கிறார் முரளி ராமசாமி.

விஜய் – அஜித்

இந்த விழாவில் கலைஞர் 100 -க்கான மலர் ஒன்றையும் வெளியிடுகிறார்கள். ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.வாசன், டி.ஆர்.சுந்தரம் ஆகியோர் தொடங்கி இப்போது உள்ள நட்சத்திரங்கள் வரை பலரும் கலைஞர் குறித்துப் பேசியவை இந்த மலரில் இடம்பெறும்” என்றும் சொல்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.