மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்; அனர்த்தத்தினால் 7225 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழையின் தொடராக பெய்து வரும் மழையினால் கடந்த 48 மணித்தியாலங்களின் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதை அவதானிக்கலாம்.

நேற்றுமுன்தினம் (01) பிற்பகல் இரண்டு மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை தொடர் மழை நேற்று (02) காலை ஆறு மணியளவில் ஓய்ந்தது. நேற்றுமுன்தினம் முதல் நேற்று காலை வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 164.9மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இதனால் மாவட்டத்தின் மண்முனை வடக்கு, காத்தான்குடி , கோரளைப்பற்று வடக்கு, மண்முனை தென் தென்மேற்கு பட்டிப்பளை, போரதீவுப் பற்று வெல்லாவெளி மற்றும் எறாவூர் பற்று போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததுடன்; பெரும்பாலான வீதிகளும் வெள்ள நீரால் நிறைந்துள்ளன.

இதேவேளை மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதுடன் 1231 குடும்பங்களும் 4218 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34குடும்பங்களின் 109 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (01) காலை 8.30 மணியிலிருந்து நேற்று (02) நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் ஏறாவூர்பற்று கரடியனாறு, வந்தாறுமூலை, சித்தாண்டி போன்ற இடங்களில் 443 குடும்பங்களின் 1993 நபர்களும், வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் 117 குடும்பங்களின் 598 பேரும், நாவற்குடா, பாரதி புறம் மற்றும் ஜெயந்தி புறம் பகுதிகளில் 59 குடும்பங்களில் 168நபர்களும், கதிரவெளி 213பகுதியில் 47 குடும்பங்களின் 139 நபர்களுமாக, மாவட்டத்தில் மொத்தம் 1985 குடும்பங்களில் 7285 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கிரான் புலி பாய்ந்த கல் மற்றும் கின்னயடி பிரம்படித்தீவு, ஈரலகுளம், மயிலவட்டுவான், வாகரை கல்லரிப்பு பகுதிகளுக்குச் செல்லும் பாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு படகு சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இவர்களில் 28 குடும்பங்களின் 82 நபர்கள் மண்முனை வடக்கு சாரதா வித்தியாலயம், மெத்தடிஸ்ட் பாலர் பாடசாலை மற்றும் கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை ஆகிய தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.