இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

காத்மாண்டு: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார்.

தனது நேபாளம் பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், “2024ம் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் காத்மாண்டு சென்ற ஜெய்சங்கரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் விமான நிலையம் வந்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா – நேபாளம் கூட்டு ஆணையத்தின் 7-வது கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்க இருக்கிறார். இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து இருதரப்பு உறவுகள் குறித்தும், ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய துறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நேபாளம் கூட்டு ஆணையம் 1987-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையத்தின் ஆய்வுக் கூட்டத்தில் இரு நாடுகளின் வெளியறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். தனது இந்த இரண்டு நாள் பயணத்தின்போது நேபாள அதிபர் ராமசந்திர பாடெல், பிரதமர் புஷ்ப கமல் தஹால் உள்பட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். ஜெய்சங்கரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவருக்கும், அவரோடு சென்றுள்ள இந்திய தூதுக்குழுவுக்கும் நேபாள வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் இரவு விருந்து அளிக்க உள்ளார்.

முன்னதாக காத்மாண்டு போஸ்ட் இதழுக்கு பேட்டி அளித்திருந்த என்.பி. சாத், “இந்தியா உடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, 30-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரம், நீர் வளம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.