இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் எங்கே இருக்கிறது என்பதையும், நாம் வளர்ந்திருக்கும் திறன்களையும் பார்க்கும்போதும் மிகப் பெருமையாக உணர்கிறேன். பிரதமர் மோடியின் அரசு, சீனா விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட அன்பு வாதத்துக்கு மாற்றாகச் சர்தார் வல்லபாய் படேலின் நடைமுறைவாதத்தைப் பின்பற்றுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சீனாவுடன் நட்பு மனப்பான்மையோடு அணுகியபோது, அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் இந்தியாவின் நலன்கள் மற்றும் உலகத்தின் இயக்கத்தைக் கருத்தில் கொண்டு யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றினார். வல்லபாய் படேலுக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே சீனாவைப் பற்றிய கடித பரிமாற்றம், அவர்களின் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும். 1962-ம் ஆண்டு சீனாவுடனான போரின் போது அமெரிக்காவிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மிகவும் தயங்கினார். காரணம், அமெரிக்கா மீதான இந்தியாவின் விரோதம் வேரூன்றியிருந்தது.
ஆனால், வல்லபாய் படேல்,’வெளியுறவுக் கொள்கையில் நாம் ஏன் அமெரிக்காவின் மீது இவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறோம். நாம் அமெரிக்காவை நமது சொந்த நலன்களின் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர, அமெரிக்கா சீனாவுடன் எவ்வாறு நடந்து கொள்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது’ எனத் தெரிவித்தார்.

ஜவஹர்லால் நேரு காட்டிய லட்சியவாதம், அன்பு வாதம் ஆகியவற்றுக்கு மாற்றாக, வல்லபாய் படேலின் யதார்த்தவாதத்துடன் பிரதமர் மோடி நெருக்கமாக ஒத்துப்போகிறார். இந்த விவகாரத்தில் ஜவஹர்லால் நேருவிற்கும் – வல்லபாய் படேலின் அணுகுமுறைக்கும் இடையே கருத்து வேறுபாடு முதல் நாளிலிருந்தே தொடங்கியிருக்கிறது. தற்போதைய இந்தியா – சீனாவிற்கு இடையேயான உறவு மரியாதை, விருப்பம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் மேம்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.