சேட்டிலைட் மூலமாக இண்டர்நெட் சேவை…விரைவில் களமிறக்கும் ரிலையன்ஸ் ஜியோ

மும்பை,

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவையை தொடங்கியது. அடுத்த சில வருடங்களிலேயே இந்தியாவின் டாப் நிறுவனமாக மாறியது. இதற்கிடையே ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் என்ற புதிய சேவையை ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பிக்க உள்ளது.

இது சேட்டிலைட் அடிப்படையில் வழங்கப்படும் அதிவேக ஃபைபர் இணையச் சேவையாகும். இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையத்திற்கு (IN-SPAce) ஜியோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றால்

செயற்கைக்கோள் அடிப்படையிலான நாட்டில் இயங்கும் முதல் ஃபைபர் இணையச் சேவையை அளிக்கும் நிறுவனம் என்ற சிறப்பை ஜியோ பெறும். இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகையில், “நமது நாட்டில் சாட்காம் எனப்படும் சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து ஒப்புதல்களும் ஜியோ நிறுவனத்திற்கு விரைவில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

நமது நாட்டில் சாட்டிலைட் மூலம் சேவைகளைப் பெற வேண்டும் என்றால் பாதுகாப்பு தொடங்கிப் பல அனுமதிகள் மற்றும் பல அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்கான பணிகளில் ஜியோ இறுதிக்கட்டத்தில் இருக்கிறது” என்றார்.

கிராமப்புறங்களில் ஃபைபர் பதித்து அதிவேக இணையச் சேவை வழங்க அதிக செலவாகும். அதேவேளையில் அங்கு பயன்பாடு குறைவாக இருப்பதால், அதற்கு எந்தவொரு நிறுவனமும் முன்வர தயங்கும். அதுபோன்ற இடங்களில் இவை இந்த சேட்டிலைட் ஃபைபர் சேவை பயன்படும். மேலும், இப்போது சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது இணையச் சேவை முடங்கியது. நிலத்திற்கு அடியில் பதித்த ஃபைபர் கேபிள் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம். எனவேஎ, சேட்டிலைட் மூலம் இணையச் சேவை வழங்கும் போது இந்த பிச்சினையும் ஏற்படாது.

கடந்த ஆண்டு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் ஜியோ நிறுவனம் அதன் ஸ்பேஸ் ஃபைபர் தொழில்நுட்பத்தை விளக்கிக் காட்டியது. அப்போது ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது ஸ்பேஸ் ஃபைபர் மூலம் குஜராத்தில் உள்ள கிர், சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, ஒடிசாவின் நப்ராங்பூர் மற்றும் அசாமில் ஓஎன்ஜிசி- ஜோர்ஹாட் ஆகிய நான் கிராமங்களுக்கு இணையச் சேவை வழங்கியுள்ளதாகக் கூறியிருந்தது.

எப்போது இந்த ஸ்பேஸ் ஃபைபர் சேவை நாடு முழுக்க தொடங்கப்படும் என்பது குறித்த தகவல்களை ஜியோ நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த ஸ்பேஸ் ஃபைபர் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், யூடெல்சாட் குழுமத்தின் ஒன்வெப் மற்றும் அமேசானின் ப்ராஜெக்ட் கைபர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். இந்த மூன்று நிறுவனங்களுமே இந்தியாவில் தங்கள் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.