எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி களம் காண்கிறது. I.N.D.I.A கூட்டணியின் சார்பில், 26 கட்சிகள் இணைந்து 4 கட்ட கூட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், அவ்வப்போது, I.N.D.I.A கூட்டணிக்குள் சில சலசலப்புகளும் எழுந்துவருகின்றன. இதற்கிடையில், டெல்லியில் நடந்த 4-வது I.N.D.I.A கூட்டணிக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதில், மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை வழங்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்மொழிந்தது திரிணாமுல் காங்கிரஸ். இந்த நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் கூட்டணி வேண்டும் என மம்தா பானர்ஜிதான் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். நாங்கள் உங்களிடம் யாசகம் கேட்கவில்லை.

எனவே, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட முடியும். எங்களுக்கு மம்தா பானர்ஜியின் கருணை தேவையில்லை. மம்தா பானர்ஜி உண்மையில் பிரதமர் மோடிக்குச் சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதால், இந்தக் கூட்டணியை விரும்பவில்லை” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.