வயநாடு: சுற்றுலா பேருந்து மோதி காயம்; ஒருமாத வேதனை… பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை!

கேரள மாநிலம், வயநாட்டில் அமைந்துள்ளது முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயம். யானை மற்றும் புலிகளின் முக்கிய வாழ்விடங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது. உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் சாலையைக் கடக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படிச் சாலையைக் கடக்கும் வனவிலங்குகள், சில சமயங்களில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

உயிரிழந்த யானை

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி காலையில் முத்தங்கா பகுதியில் ஆண் யானை ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த சாலையில் வந்த சுற்றுலாப் பேருந்து, யானைமீது மோதியுள்ளது. இந்த விபத்தில் யானைக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேருந்து ஓட்டுநர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

காயமடைந்த பயணிகள் பத்தேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். காயத்துடன் வனத்திற்குள் சென்ற யானையை கண்டறிந்த வனத்துறையினர், அதற்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த யானை

இது குறித்து வயநாடு வனத்துறையினர், “சுமார் 25 வயது மதிக்கத்தக்க இந்த யானைமீது பேருந்து மோதியதில், உடலில் பலத்த உள்காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சி எடுத்தும், பயனில்லை. உடற்கூறாய்வு செய்து மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆய்வு முடிவுகள் வெளியானதும் இறப்புக்கான முழுமையான விவரங்கள் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.