147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கேப்டவுன் போட்டி…!

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்திய அணியும் தனது முதல் இன்னிங்சில் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் நாளிலேயே தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 80 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டவுனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி வெறும் 642 பந்துகளிலேயே (107 ஓவர்கள்) முடிவுக்கு வந்தது. இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டி என்ற மாபெரும் சாதனையை இது படைத்துள்ளது.

இதற்கு முன்னர் 1932ஆம் ஆண்டு மெல்பொர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி 656 பந்துகளில் (109.2 ஓவர்கள்) முடிவடைந்ததே சாதனையாகும். தற்போது அந்த சாதனையை கேப்டவுன் டெஸ்ட் போட்டி முறியடித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.