“இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு” – அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த விழாவில் பங்கேற்றார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி புனித யாத்திரையாக சென்று வருகின்றனர். அப்பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் ஏற்கனவே 6 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “திருவிதாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோயிலின் செயலாளர் கோரிக்கைக்கு ஏற்ப, சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்கெனவே 6 லட்சம் பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற திருக்கோயில்கள் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் 4 கண்டெய்னர் வாகனங்களில் சபரிமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையை பொறுத்தளவில் ஒரு மணி நேரத்திற்கு 3,500 பக்தர்கள் தான் தரிசனம் செய்யக்கூடிய சூழல் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்ற சூழலில் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும், காவல்துறையும் இணைந்து சிறந்த முறையில் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதிகளவில் பக்தர்கள் வருகின்ற போது அவர்களுக்கு தரிசனத்தை ஏற்பாடு செய்வதற்கு சிரமம் ஏற்படுகின்றது. அதோடு மட்டுமல்லாமல் மாலையில் தரிசனத்திற்கு செல்பவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நெய் அபிஷேகத்திற்காக இரவு தங்கி விடுகிறார்கள். அந்த பக்தர்களின் எண்ணிக்கையும் தரிசனத்திற்கு செல்லுகின்ற எண்ணிக்கையும் கணக்கிடும் போது ஒரு லட்சத்தை தாண்டுகிறது. ஆகவே பக்தர்கள் தரிசனம் செய்வதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.

இருந்தாலும் கேரள அரசு சாதுரியமாக திட்டமிட்டு முடிந்த அளவிற்கு பல்வேறு வசதிகளையும், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும் தொடர்ந்து ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பக்தர்கள் அதிகமான நேரத்திற்கு வரிசையில் நிற்பதால் தான் தற்போது இது போன்ற உதவிகளை பக்கத்து மாநிலமாக இருக்கின்ற நாம் சகோதரத்துவத்தோடும், நட்புணர்வோடும் நம்முடைய பக்தர்களும் அதிக அளவில் செல்கின்ற படியால் இது போன்ற உதவிகளை செய்து வருகிறோம். சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்னும் கூடுதலாக திட்டமிட்டு பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம்: திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எங்களுடைய இலக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க வேண்டும் என்பதுதான். அங்கு குளிர்சாதன வசதி செய்கின்ற பணிகள் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கிடைத்த அனுபவத்தை கொண்டு, குத்தம்பாக்கம் முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்ற போது பயணிகளுக்கு தேவையான பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் ஆலோசித்து, தனியார் ஆலோசனைகளையும் பெற்று சிறந்த முறையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை இயக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்குவதற்குண்டான நடவடிக்கைகளை மேலும் விரைவுப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.