தூத்துக்குடி வெள்ளம்: `நமக்காய்யா இந்த நெலம?’ அந்த 6 நாள்கள்… ஒரு மாணவ பத்திரிகையாளரின் கள அனுபவம்

ஒரு கல்லூரி மாணவனாக இருந்து, விகடன் மாணவர் பத்திரிகையாளராகக் களத்தில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது… அந்த சமயத்தில்தான் இயற்கையின் கொடையான மழை, பேரிடராக தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட பெருமழைதான் அது. அந்த மழை வெள்ளத்தை ஒரு மாணவ பத்திரிகையாளனாக நான் அணுகிய விதம், நான் பெற்ற அனுபவங்கள்தான் இக்கட்டுரை…

டிசம்பர் மாதம் 16-ம் நாள் (சனிக்கிழமை) இரவு எட்டு மணியிலிருந்தே சிறு சாரலாக மழை தூறத்தொடங்கியது. இந்த மழைதாம் கழுத்தை நெரிக்கும் பேய் மழையாக மாறப்போவதை யாரும் அந்நேரம் எதிர்பார்க்கவில்லை. நானும் அப்படி நினைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் அது தன் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கியது மழை.‌‌ திடீரென வானத்தை யாரோ உடைத்தது போல மழை கொட்டத் தொடங்கியது. சாத்தான்குளத்தில் மழை வெள்ளத்தின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

ஒரு நிருபராக சாத்தான்குளத்தின் கள நிலவரத்தைப் பதிவு செய்யச் சென்றேன். “பாத்து கவனமா போய்ட்டு வா” என என் அம்மா அறிவுறுத்தினார். என் கையில் இருந்தவை விகடன் அடையாள அட்டை, குடை, ஒரு தொப்பி மட்டுமே. வண்டியை ஓட்ட ஓட்ட மழைத்துளிகள் கூளாங்கற்கள்போல மேலே விழுந்தன.

வெள்ளத்தின் அளவு அதிகமாக இருந்ததால், காவல்துறையினர் ஊருக்குள் வாகனத்தை அனுமதிக்கவில்லை. வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கிவிட்டேன். தூரம் செல்ல செல்ல முழங்கால் அளவிலிருந்து இடுப்பளவிற்கு நீரின் அளவு உயர்ந்துவிட்டது. நான் வெள்ள நீரின் வழியாகச் செல்லச் செல்ல நான் கண்ட காட்சிகள் என்னைக் கலக்கமுறச் செய்தன. அங்கே மளிகைக் கடைக்காரர் ஒருவர் ஒரு சிறிய பாத்திரத்தின் மூலம் தன் கடைக்குள் இருந்த வெள்ளநீரை வெளியேற்றிக் கொண்டே “எல்லா பொருளும் நாசமாயிருச்சு, நீ இப்போ போட்டோ எடுத்து என்ன ஆகப் போகிறது தம்பி” என வேதனையில் பேசினார்.

அங்கு வந்திருந்த ஊர்காரர்களும், கடைக்காரர்களுக்கு மணல் மூட்டைகளை அடுக்க உதவி செய்து கொண்டிருந்தனர். சிறிது தூரம் நடந்து சென்ற போது வெள்ள நீர் நிறம் மாறியிருந்தது. சற்று உற்றுப் பார்த்த போதுதான் அருகிலிருந்த பாதாளச் சாக்கடை குழி ஒன்றிலிருந்து சாக்கடை நீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அதன் அருகிலிருந்த குடிசைப் பகுதி ஒன்றில் ஒரு படகு ஒன்றைக் கண்டு பார்வையைத் திருப்பினேன். ஆனால் அந்த படகிற்கு எரிபொருள் என்ஜின் இவையெல்லாம் தேவையில்லை போலும், ஒரு அண்ணன் தம்பியின்‌ கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய பழைய குளிரூட்டியாலான படகு தான் அது. ‘சென்னைக்கு மட்டும் தான் வெள்ளம் வருமா? எங்கள் ஊருக்கும் வரும்’ என்ற ஒரு எதிர்பார்ப்பின் வெற்றியினை காட்டுவதாகவே அந்த கண்கள் இருந்தன.

இரண்டாவது நாள் அதாவது டிசம்பர் 18(திங்கட்கிழமை) உடன்குடியின் கள நிலவரத்தைப் பதிவு செய்யச் சென்ற போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கழுத்தளவிற்கு ஊரைச் சுற்றி ஓடிய வெள்ள நீர் தான் அது. அப்படியே திரும்பி ஊருக்குள்ளே நடக்க ஆரம்பித்தேன். பால் பண்ணையைச் சுற்றிலும் கூட்டமாக இருந்தது. கூட்டத்தை விலக்கிச் சென்று பார்த்தபோது ஒருவர் யாரிடமும் பணம் வாங்காமல் காஃபி கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அவர்தான் பால் கொள்முதல் செய்யும் ஜெகதீஸ். இவர் சில ஆண்டுகளாகப் பால் கொள்முதல் செய்து வருகிறார். உள்ளூர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பாலை காபி போட்டு அனைவருக்கும் இலவசமாகக் கொடுத்து வருகிறார். இந்த மாதிரியான பேரிடர் காலங்களில் தான் சில உன்னதமான இதயங்களையும் பார்க்க முடிகிறது.

அப்படியே கால்நடையாக பக்கத்து ஊரான அடைக்கலாபுரத்திற்கு சென்றேன். அங்கு இளைஞர் பட்டாளம் ஒன்று அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஊரில் ஏறத்தாழ முக்கால்வாசி வீடுகள் வெள்ள நீரில் மூழ்கி விட்டன. ஆகையால் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழுதான் அது.

கொஞ்ச நேரம் அவர்களோடு இருந்து தோள்கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்குக் கிளம்பினேன். வரும் வழியில் விவசாயி ஒருவர் , அவருடைய வீட்டு வாசலிலிருந்து புலம்பிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்களிடம் கேட்க, “அவனோட பதிமூனு ஆடும் தண்ணில முங்கி செத்துட்டு” என்றனர். தங்கத்துரை அண்ணனிடம் பேச்சுக் கொடுத்தேன். மனதிலிருந்ததை எல்லாம் கொட்டத் தொடங்கி விட்டார். “இந்த ஆடுக என் பிள்ளைகளை மாதிரி வளர்த்தது, எவ்வளவு பரிதவிப்புல செத்துருக்கும். பாவம்… அந்தப் பால்குடி குட்டியைக்கூட போட்டுட்டு வந்தேன். கடைசியில எல்லாத்தையும் என் கையால தோண்டி, மூடியிருக்கேன்.”

என சொல்லத் தொடங்கினார் அந்த ஏழை விவசாயி.. மூன்றாம் நாள்(டிசம்பர் 19)காலை முதலே நீந்திச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றனர் என் ஊர் மக்கள். தலையில் ஒரு மூட்டையும் தோளில் ஒரு பையுமாக வந்த ஒருவர், “நமக்காய்யா இந்த நிலைம” என கடந்து சென்றுவிட்டார்.

“அந்த அக்காக்கு டயாலிசிஸ் பண்ணனுமாம்”

நான்காம் நாளில் (டிசம்பர் 20) காலையிலேயே தண்ணீரின் அளவைப் பார்க்கச் சென்றேன். தூரத்தில் மாட்டுவண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. அருகிலிருந்தவர்களிடம் விசாரிக்க, “அந்த அக்காவுக்கு டயாலிஸிஸ் பண்ணணுமாம், அதான் மாட்டு வண்டியில கூப்டுட்டு போறாங்க” என்றனர். அந்த அக்கா கண்ணீர் சிந்தியபடி மாட்டு வண்டியில் சென்றுகொண்டிருந்தார். எனக்கும் கூட ஒரு நொடி…..“பாத்துப் போய்ட்டு வா”

ஐந்தாம் நாளிலேயே (டிசம்பர் 21) வெளியே செல்லும் அளவிற்கு நீரின் ஓட்டம் குறைந்திருந்தது. திருச்செந்தூர் அருகேயுள்ள வெள்ளாளன் விளை மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருந்ததாக என் நண்பனிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. உடனடியாக கள நிலவரத்தைப் பதிவு செய்யக் கிளம்பினேன்.

“மழை நேரம், பாத்து போய்ட்டு வா.. எங்கயும் தெரியாத இடத்துக்குப் போகாத” என என் தாயார் வழியனுப்பி வைத்தார். கடந்து சென்ற வழியெங்கும் முட்புதர்களில் செத்துக் கிடந்த ஆடுகள், நாய்களைப் பார்க்கும்போது, ஒரு நொடியில் விம்மிவிட்டேன். அதையும் கடந்து செல்ல செல்ல ‘இங்கு என் ராஜ்ஜியம் தான், யாரும் ஒன்றும் செய்ய இயலாது ‘ என வெள்ள நீர் சாலைகளையும் தன் இஷ்டத்திற்குப் புரட்டிப் போட்டிருந்தது. ஏதோ கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருந்த சாலைகள், அங்க குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தன. அப்படியே சென்றுகொண்டிருந்த போது வெள்ளாளன் விளையை அடைந்தேன். அப்போதுதான் அங்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிவாரண உதவிகளை வழங்க வந்திருந்தார். அருகிலிருந்த தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்த அந்த ஊர் மக்கள் குடிநீருக்குக்கூடக் கஷ்டப்பட்டு வந்தனர். வீடுகளெல்லாம் முழுவதும் நீரில் மூழ்கியிருந்தன. அந்த தேவாலயத்தின் உள்ளேயிருந்து பல்வேறு வேண்டுதலின் குரல்களைக் கேட்கமுடிந்தது. மற்றொரு பக்கம் வழியாக ஊருக்குள் தண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊரைச் சுற்றி மணல் மூட்டைகளை குவித்துக் கரை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்து திருச்செந்தூர் அருகே சென்ற போது ஆவுடையார்குளத்தின் பல்வேறு கரைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த உடைப்புகள் மூலம் வெளியேறிய நீரால்தான் திருச்செந்தூரே தண்ணீரில் மூழ்கியது என்கின்றனர். திருச்செந்தூர் கடல் முழுவதுமே நீல நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறியதாக தம் அனுபவங்களைப் பகிர்ந்தனர் உள்ளூர் வாசிகள். இந்த பாதிப்புகள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே ஆறுமுகநேரியை அடைந்தேன். அங்குத் தேங்கியிருந்த வெள்ள நீரை வடியவைக்க அனைத்து புறங்களிலும் குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. அப்படியும் தண்ணீரின் அளவு குறைந்த பாடில்லை.

கொஞ்ச தூரம் கடந்து சென்றபோது, அங்கு “இந்த இடம் இந்திய அரசின் உப்பு இலாகாவிற்குச் சொந்தமானது” என‌ எழுதப்பட்டிருந்தது. கணித்துக் கொண்டேன், அது முழுவதும் உப்பளம் என்று… அங்கே டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த உப்பு வெள்ள நீரின் பசிக்கு இரையானதை எண்ணி மனம் நொந்தது. ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் வியர்வைத் துளியில் விளைந்த உப்பு அது. இப்போது அந்த வியர்வைத் துளிகள் எங்குச் சென்றதோ தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்த உப்பளங்கள் இன்று பெரிய கடல் போலக் காட்சியளித்தது.

அதே வழியில் சென்று கொண்டிருந்த போது ‘தண்ணீர்ப்பந்தல்’ என்ற ஒரு கிராமத்தை அடைந்தேன். முன்பு ஒரு காலத்தில் அங்குப் பெரிய தண்ணீர்ப் பந்தல் இருந்திருக்கும் என நினைக்கிறேன். இப்போதும் ஒன்றும் குறைவில்லை, முழு கிராமமுமே தண்ணீரில் தான் மூழ்கியிருந்தது, என தங்கள் கண்ணீரையும் சேர்க்கின்றனர் அந்த ஊர் மக்கள். அப்போது அங்குச் சாலையின் நடுவே முதியவர் ஒருவர் தீமூட்டிக் கொண்டிருந்தார்.

அவருடனே கன்று குட்டியும்‌‌ சேர்ந்து குளிர்‌காய்ந்து கொண்டிருந்தது. அவரிடம் கேட்டபோது, “கன்னு குட்டி நிறைய தண்ணி குடிச்சிருச்சுப்பா, அதான் வெக்க காட்டுனா சரியாயிரும்” எனக் கூறிக் கொண்டே அடுத்த சுள்ளியை(விறகு) தீயில் போட்டார். அப்படியே நேராகச் சென்றபோது ஆத்தூர் செல்லும் சாலையில் கரையெங்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் சென்ற போது ஒரு பத்து பதினைந்து காவலர்கள் அந்த வழியாகச் சென்ற வாகனங்களை திருப்பியனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வெள்ள நீரில் தப்பித்தோம் பிழைத்தோம் என வெள்ள நீரைக் கடந்து வந்து கொண்டிருந்தது. அப்படியே வீட்டிற்குத் திரும்பிவிட்டேன்.

ஆறாம் நாளில் ( டிசம்பர் 22) நேற்று நான் சென்ற ஆறுமுகநேரி-ஆத்தூர் சாலையில் நீரின் ஓட்டம் குறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது‌. உடனே கிளம்பிவிட்டேன். அந்த சாலையில் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் இருந்து “தம்பி நடுவுல வண்டிய நிறுத்திறாத, வேகமா போயிரு” என ஒரு அறிவுறுத்தல் கிடைத்தது. எப்படியோ அந்த சாலையை வெற்றிகரமாகக் கடந்து ஆத்தூர் ஊருக்குள் நுழைந்துவிட்டேன். எங்குப் பார்த்தாலும் சேரும் சகதியுமாக இருந்தது. அந்த ஊர் முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருந்திருக்கும் எனப் புரிந்து கொண்டேன். படகுகளும் படகோட்டிகளும் அவர்களது மீட்புப் பணிகளை முடித்துவிட்டுப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தன.

கடைக்காரர்கள் தம் கடைக்குள் மண்டிக் கிடந்த சேற்றை அகற்றும் பணியில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். கடையில் வீணான பொருட்களை எல்லாம் வெளியே கொட்டிக் கொண்டிருந்தனர். தூய்மைப் பணியாளர்கள் அசுத்தங்களை அகற்றி வந்தனர். எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் ‘தமிழ்நாடு அரசு ‘ என எழுதப்பட்ட வாகனங்களே நிறைந்திருந்தன. ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு தான் இவற்றை எல்லாம் பார்க்க முடிந்தது என்பது தான் ஒரு வருத்தமான செய்தி.

அதே சாலை வழியாக ஏரலுக்குக் கிளம்பினேன். செல்லும் வழியில் உயர்மின் கோபுரம் ஒன்று அரைகுறையாக தொங்கிக்கொண்டிருந்த து. அதைச் சுற்றிலும் மின் வாரிய ஊழியர்களின்‌ கைகள் அதைச் சீர் செய்து வந்தன‌. அதன் அருகிலேயே மின்வாரிய ஊழியர் ஒருவர் இட்லி பொட்டலத்தைக் கையில் வைத்து நின்று கொண்டே அவசரம் அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச தூரம் நடந்து சென்ற போது நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சரிந்த விழுந்து கிடந்தன. அவை எல்லாம் இந்த பொங்கல் அறுவடைக்குத் தயாராகி இருந்தது என்பது கூடுதல் வேதனையை தந்தது.

அதே சாலை வழியாகச் சென்ற போது ‘உமரிக்காடு’என்ற ஊரை அடைந்தேன். நான்கைந்து லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன‌. அதைச் சுற்றி மக்களும் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர். அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு ஊருக்குள் நடக்க ஆரம்பித்தேன். அங்குப் பாட்டி ஒருவர் இடிந்த கட்டடம் ஒன்றின்‌ வாசலில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார். அவர் அருகில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன்.

“எனக்கு யாருமே இல்ல, தனியாதான் இருக்கேன், மழையில என் வீடு முழுசும் இடிஞ்சுட்டு.” என அழத் தொடங்கி விட்டார். என் சிந்தனை எங்கோ சென்றுவிட்டது. அந்தப் பாட்டியின் கணவரோடு எவ்வளவு சந்தோஷமாக அந்த வீட்டில் வாழ்ந்திருப்பார். இப்போது அவர் கண்முன்னே அந்த வீடு நொறுங்கிக் கிடக்கிறது. இந்த சிந்தனைகளில் வந்த வழியாகவே நடக்கத் தொடங்கிவிட்டேன். அப்படியே ஏரல் ஊருக்குள் சென்றேன். அங்கும் மிகவும் மோசமான நிலைதான். ஏரல் பேருந்து நிலையத்தைக் கடந்த உடனே இருபுறமும் வெள்ளத்தால் வீணான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.ஒவ்வொரு வியாபாரியும் அவற்றை அள்ளி வெளியே எறிந்து கொண்டிருந்தனர். அவர்கள் பொருட்களை எறிந்த வேகத்திலேயே அவர்களின் மனக்கவலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படியே நடந்து ஏரல் ஆற்றுப் பாலத்தை அடைந்தேன்‌. நடுவில் மொத்தமாக துண்டாக்கப் பட்டிருந்தது அந்த பாலம். அதன் அருகே பல்வேறு வாகனங்கள் புரட்டிப் போடப்பட்டிட்டிருந்தன. நான் போன சமயத்தில் வாகன உரிமையாளர் ஒருவர் அவருடைய ஆட்டோவைத் தேடிக் கொண்டிருந்தார். இன்னும் பலர் அவர்களுடைய வாகனங்களை மூடியிருந்த மண்ணை அகற்றிக் கொண்டிருந்தனர்.

இந்த ஆறு நாள்களும் நான் கண்ட காட்சிகள் எனக்கு ஏற்படுத்திய ரணங்கள் ஏராளம். `பேரிடர்’ என்னும் வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.