அரசியலில் குதித்த அம்பதி ராயுடு… இன்று திடீர் பல்டி – ஒரு வாரத்தில் என்னாச்சு?

Ambati Rayudu Left YSRCP: இந்திய மண்ணில் இருந்து மக்களின் மனங்களில் இருந்தும், பண்பாட்டில் இருந்தும் அரசியல் – சினிமா – கிரிக்கெட் ஆகியவற்றை நீக்கவே முடியாத அளவிற்கு சூழல் வளர்ந்துவிட்டது எனலாம். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோருக்கு கடைசி புகலிடமாக அரசியல் பார்க்கப்படுகிறது. சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் வென்று ஆட்சி செய்த வரலாறு தமிழ்நாட்டில் சின்ன குழந்தைக்கும் கூட தெரியும் எனலாம். 

அதேபோன்றுதான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் விளையாட்டு ஓய்வுக்கு பின் அரசியல் குதிப்பார்கள். இதற்கு பல இந்திய வீரர்களை நாம் கூற முடியும். கௌதம் கம்பீர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் முகமது அசாருதீன் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார். நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜன் சிங், வினோத் காம்பிளி, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் அரசியல் ஆழம் பார்த்த கிரிக்கெட் வீரர்கள் எனலாம். 

அந்த வகையில், ஓய்வு பெற்ற இந்திய வீரரும், ஓய்வுபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி வீரருமான அம்பதி ராயுடு (Ambati Rayudu) சமீபத்தில் அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த அம்பதி ராயுடு, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் கடந்த வாரம் இணைந்தார். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் டிச.28ஆம் தேதி அம்பதி ராயுடு கட்சியில் இணைந்தார். 

‘Let’s Play Andhra’ என்ற 45 நாள்கள் விளையாட்டு தொடர் நடைபெறுவதை முன்னிட்டு ஆந்திராவை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை (Jagan Mohan Reddy) சந்தித்தனர். அப்போது அம்பதி ராயுடுவும் ஜெகன் மோகனை சந்தித்திருந்தார். அதனை முன்னிட்டுதான், அவர் கட்சியிலும் இணைந்தார். இந்நிலையில் அம்பதி ராயுடுவின் இன்றைய பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

அவர் தனது X பக்கத்தில்,”ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்து விலகுகிறேன். மேலும், அரசியலில் இருந்தும் சிறிது காலம் ஒதுங்கி இருக்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவை இடுகிறேன். மேலும் நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். அம்பதி ராயுடு கட்சியில் இருந்து ஒரு வாரத்தில் ஓய்வு பெற்றது பலரிடமும் கேள்வியெழுப்பி உள்ளது.

This is to inform everyone that I have decided to quit the YSRCP Party and stay out of politics for a little while. Further action will be conveyed in due course of time.

Thank You.

— ATR (@RayuduAmbati) January 6, 2024

அம்பதி ராயுடு (Ambati Rayudu Stats) இந்திய அணிக்காக 2013ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை 55 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக 124 ரன்கள் அடித்துள்ள இவர் மொத்தம் 1694 ரன்களை குவித்துள்ளார். அதில் 10 அரைசதம், 3 சதங்கள் அடக்கம். 6 டி20 போப்டிடகலில் மட்டுமே அவர் விளையாடி உள்ளார். டெஸ்டில் அறிமுகமாகாத இவர் 2010ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். கடந்தாண்டு ஓய்வு பெற்ற ராயுடு, ஐபிஎல் தொடரில் மொத்தம் 204 போட்டிகளில் விளையாடி 4348 ரன்களை குவித்துள்ளார். இதில் 22 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.