விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு வராமல், இப்போது இல்லத்திற்கு செல்லும் நடிகர்கள்

தமிழ் சினிமா உலகின் மனிதாபிமானமிக்க நடிகர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்தை கடனிலிருந்து மீட்டெடுத்தவர். அவர் கடந்த வாரம் உடல் நலக் குறைவால் மறைந்தார். பொதுவாக நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ மறைந்தால் வேறு எந்த வேலை இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு அஞ்சலி செலுத்தப் போவது தமிழர்களின் பண்பாடு.

தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரை திரையுலகம் எங்களது கோயில், வீடு என 'பன்ச்' டயலாக் பேசும் நடிகர்கள்தான் அதிகம். ஆனால், திரையுலகத்தில் ஒரு போராட்டம், ஒருவரது மறைவு என்றால் அதில் வந்து கலந்து கொள்ளத் தயங்குவார்கள். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவரும் விஜயகாந்த்தின் மறைவுக்கு வந்து அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத பல நடிகர்கள், சில நடிகைகள் விஜயகாந்தின் நினைவிடத்திற்கும், பின்னர் அவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

சரத்குமார், சசிகுமார், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கடந்த சில நாட்களில் நினைவிடத்திற்கும், இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்கள். அஜித்தும் அப்படி செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்றும் சொல்கிறார்கள். இதனிடையே, ஒரு வாரமாகியும் நடிகர் சங்க செயலாளரான விஷால் ஏன் இன்னும் வெளிநாட்டிலிருந்து வரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.