சொதப்பலில் முடிந்த ‛கலைஞர் 100' நிகழ்ச்சி: நொந்துப்போன ரசிகர்கள்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர்.

நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் தவிர யாருமே வரவில்லை. முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை.

எதிர்பார்த்த அளவிற்கு மக்களும், திரைப்பிரபலங்களும் வராமல் சொதப்பல் நிகழ்ச்சியாக மாறியதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் எனக் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சியின் நடுவே அடுத்தடுத்து இடைவெளி விடுவது, அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல் என்ன என்ற குழப்பம், மைக் கோளாறு, லைட் கோளாறு என பல குறைபாடுகள் தெரிந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேட்டரி காரில் முக்கியமானவர்கள் அரங்கதுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.. மற்றவர்கள் நடந்தே உள் அரங்கம் வந்தனர்.

10 கோடி எங்கே…
இந்த நிகழ்ச்சிக்காக கலைஞர் டிவி சார்பில் 10 கோடி கொடுக்கப்பட்டதாகவும், அதில் நடிகர், நடிகைகள் நடனம் ஆட தலா ரூ.1 லட்சம் பேசப்பட்டதாகவும், சாயிஷா மட்டும் ரூ.15 லட்சம் பெற்றதாகவும் செய்திகள் வெளியானது. மெயின் ஸ்பான்சர் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தினர்; அதனால் அவர்கள் நடத்தும் நந்தினி ஸ்வீட்ஸ் மட்டும் அரங்கின் உள்ளே உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி. மற்றபடி டீ, காபி கூட அங்கு கிடைக்கவில்லை. இத்தனை பெரிய நிகழ்ச்சி நடத்த திட்டம் தீட்டியவர்கள் குறைந்தபட்சம் 2, 3 ஸ்டால்கள் வைக்க வேண்டாமா?


நடிகைகள் முக்கியத்துவம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா முதல் வரிசையில் முக்கிய இடம் பெற்றனர். செய்தித்துறை அமைச்சர் பக்கமும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பக்கமும் அமர பலரும் போட்டி போட்டனர். மற்ற நடிகைகள் கொஞ்சம் அலப்பறை செய்தனர். பூச்சி முருகன், நடிகர் கார்த்தி, செல்வமணி, முரளி உள்ளிட்டோர் ஓடி ஓடி வேலை செய்தார்கள். மற்றவர் பெயரளவுக்கு மட்டுமே வேலை பார்த்தனர்.

தூக்கி வீசப்பட்ட டி ஆர்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டி.ராஜேந்தரை 2வது வரிசையில் அமர சொன்னார்கள்..ஆனால் முதல் வரிசையில் நடிகர் பரத், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சில நடிகர்கள் இடம் பிடித்தனர். டி.ராஜேந்தர் பேசாமல் பாதியில் கிளம்பினார்.

ரஜினி பேச்சும்.. காலி இருக்கைகளும்..
பொதுவாக நடிகர் ரஜினி பேசும்போது ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள். ஆனால் இம்முறை ரஜினி பேசும்போது முழுவதும் நிசப்தமே நீடித்தது. அந்த அளவிற்கு ரசிகர்களின் வருகையும் குறைவாக இருந்தது.
புறக்கணித்த பிரபலங்கள்

இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். குறிப்பாக, விஜய், அஜித், விக்ரம், விஷால், சிம்பு, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, போன்ற முன்னணி நடிகர்களும், குஷ்பு, ராதிகா, சுஹாசினி, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் போன்ற நடிகைகளும் பங்கேற்கவில்லை. இதனால் அவர்களின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆளாளுக்கு நிகழ்ச்சி நடத்தினார்களே தவிர, சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக ‛கலைஞர் 100' அமையவில்லை என்பதே உண்மை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.