தேனி மாவட்டம், பெரியகுளம், தேவதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் தொடர்ச்சியாக குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் திருட்டுபோயின. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி தேவதானப்பட்டியில் உள்ள ராக்கம்மாள் கோயிலில் பூட்டை உடைத்து பித்தளை குத்துவிளக்குகள், பொங்கல் பானை உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து தேவதானப்பட்டி போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் கோயிலில் புகுந்து பூஜைப் பொருள்களைத் திருடவது தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்து, அவரிடமிருந்து குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளைப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். “தேவேந்திரனுக்கு 38 வயதாகிறது. அவர் 2022 முதல் பெரியகுளம், தேவதானப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 கோயில்களிலும், ஜெயமங்கலம் பகுதியில் 3 கோயில்களிலும், ஆண்டிபட்டி பகுதியில் 1 கோயிலிலும் என 10 கோயில்களில் கோபுர கலசங்கள், உண்டியலை உடைத்து பணம் திருடுவது, குத்துவிளக்கு, தாம்பாழத்தட்டு, செம்பு, பித்தைளைப் பொருள்களைத் திருடி வந்துள்ளார்.

இது தொடர்பான புகார்கள் வந்தது முதல் விசாரணையை தொடங்கினோம். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்கிவில்லை. இதனால் 2 ஆண்டுகளாக எங்களிடம் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் செங்குளத்துப்பட்டியில் உள்ள கோயிலில் திருட முயன்றார். அப்போது ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ.,க்கள் வேல்மணிகண்டன், ஜான்செல்லத்துரையிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 15 குத்துவிளக்குகள், 5 பொங்கல் பானைகள், ஒரு கோபுர கலசம், மணி, பூஜை தட்டு என ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்துள்ளோம்” என்றனர்.