அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் `அன்னபூரணி’.
நயன்தாராவின் 75வது படமான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியானது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், இந்தப் படம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் கூறி மும்பைக் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். படத்தின் ஒரு காட்சியில் ஜெய் நயன்தாராவிடம் ‘ராமர் கூட அசைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறார்’ என்று கூறியிருப்பார்.

அதேபோல் அர்ச்சகரின் மகளாக இருக்கும் நயன்தாரா நமாஸ் செய்வது போன்ற காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதனால், ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டிருக்கிறது. மக்களின் உணர்வைப் புண்படுத்துகிறது. ‘லவ் ஜிஹாத்’தை ஆதரிக்கிறது என்றும் ரமேஷ்சோலங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
வெறும் சுய விளம்பரத்துக்காகப் பலரும் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்பதாக இதைச் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.