“அன்று தவறாக பேசிவிட்டு இன்று அதானியை பாராட்டும் திமுகவினர்” – அண்ணாமலை

சென்னை: “தமிழகத்தில் அரசியல் எல்லாம் விட்டுவிட்டு சில கட்சிகள், மாநில முன்னேற்றத்துக்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமக்கு சொல்லியிருக்கிறது” என்று அதானி குழும முதலீடுகளைச் சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

சென்னையில் ஜன.7 மற்றும் ஜன.8 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடிக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதில், அதிகபட்சமாக டாடா குழுமத்தின் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெ நிறுவனம் ரூ.70,800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.அடுத்தபடியாக அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500 கோடி, அம்புஜாசிமெண்ட் ரூ.3,500 கோடி, அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடி, டோட்டல் காஸ் & சிஎன்ஜி ரூ.1,568 கோடி என அதானி குழும நிறுவனம் மொத்தம் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இதற்கு முன்பாக தேர்தல் சமயத்தில் திமுகவினர் அதானி குழுமத்தை மிக தவறாக பேசினார்கள். அதானி ஏதோ மோடியின் சொத்து, அதானிக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கிறது. பாஜகவுக்கு அதானிதான் நிதி உதவி செய்கிறார் என்பது போல பலவற்றை கூறினார்கள்.

ஆனால், இப்போது அதானியிடமிருந்து 42 ஆயிரத்து 768 கோடி வந்த பிறகு, ட்விட்டரில் திமுகவின் தலைவர்கள், முதல்வர் என அனைவரும் பாராட்டுகின்றனர். அதானி, அம்பானி தங்களைப் பற்றி பெருமையாக கூறியிருப்பதை பார்க்குமாறு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அம்பானி 35 ஆயிரம் கோடி முதலீடுகளை அறிவித்துள்ளார். டாடா குழுமம், 83 ஆயிரத்து 212 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. எந்தளவுக்கு தமிழகத்தில் அரசியல் எல்லாம் விட்டுவிட்டு, சில கட்சிகள் தமிழகத்தினுடைய முன்னேற்றத்துக்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமக்கு சொல்லியிருக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “உத்தரப் பிரதேசம் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும்போது, தமிழகம் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை மட்டும் ஈர்ப்பது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். வாசிக்க > “உ.பி. ஈர்த்தது ரூ.33.51 லட்சம் கோடி முதலீடுகள், தமிழகமோ ரூ.6.6 லட்சம் கோடி மட்டுமே. ஏன்?” – அண்ணாமலை கேள்வி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.