Vishal: "அவர் உயிருடன் இருந்திருந்தால்…" – விஜயகாந்த் நினைவிடத்தில் விஷால் உருக்கம்!

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவரின் மறைவு அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கோயம்பேடு தே.மு.தி.க கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் விஜயகாந்த் இறந்தபோது நேரில் வரமுடியாமல் வெளிநாட்டில் இருந்த நடிகர் விஷால், ஆர்யா இருவரும் இன்று காலை நேரில் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி விஜயகாந்தின் நினைவாக அங்கிருந்த மக்களுக்கு உணவு வழங்கினர்.

விஜயகாந்த் நினைவிடத்தில் விஷால், ஆர்யா

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “கலையுலகம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனிதர் என்றும் துணிச்சலான அரசியல்வாதி என்றும் பெயர் வாங்கியவர் விஜயகாந்த் அண்ணன். பொதுவாக ஒரு நல்ல மனிதர் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வோம். ஆனால், விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே சாமி என்று அழைக்கப்பட்டவர்.

‘திருமூர்த்தி’ என்ற திரைப்படத்தின் டைட்டிலிலேயே அவர் மக்களுக்காகச் செய்த நல்ல விஷயங்களைக் காட்டியிருப்பார்கள். அவர் மீட்டுக் கொண்டு வந்த நடிகர் சங்கத்தில் நான் பொதுச் செயலாளராக இருப்பதற்கு அவருடைய உழைப்பும், தைரியமும்தான் காரணம். சட்டமன்றமாக இருந்தாலும் சரி, திரைப்படம் ஆனாலும் சரி எல்லா வகையிலும் மனதில் இடம்பெற்றவர்.

Vijayakanth – கேப்டன் விஜயகாந்த்

அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் நான் சொல்லும் ஒரு வார்த்தை ‘என்னை மன்னிச்சிடு சாமி’ என்பதுதான். நான் அவரது இறுதிச் சடங்கில் அவருடன் இருந்து அவருடைய முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.