கரூர்: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் உணவகம், பண்ணை வீடு மற்றும் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் வீட்டில் இன்று வருமான வரித்துறை மதிப்பீட்டுப் பிரிவு ஆய்வு மேற்கொண்டனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அமைச்சரின் ஆதரவாளர்கள், அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே மாதம் 26-ம் முதல் தொடங்கி அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் (ஜன.12) தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில். செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணி என்பவருக்கு சொந்தமான கரூர் கோவை சாலையில் உள்ள உணவகத்தில் (கொங்கு மெஸ்) கோவையை சேர்ந்த வருமான வரித்துறை பொறியியல் மதிப்பீட்டுப் பிரிவை (அசெஸ்மெண்ட் விங்) சேர்ந்த 6-க்கும் மேற்பட்டோர் இரண்டு கார்களில் கரூர் கோவை சாலையில உள்ள உணவகம் மற்றும் அதனருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இன்று (ஜன.10) ஆய்வு மேற்கொண்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1.30-க்கு மணி வரை ஆய்வு செய்தவர்கள் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு கரூர் நகர காவல் நிலையம் பின்புறம் அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்றனர். அதன் பிறகு மதியம் 3 மணியளவில கரூர் அருகே வால்காட்டுபுதூரில் உள்ள மணிக்கு சொந்தமான பண்ணை இல்லத்தை மதிப்பீட்டுப் பிரிவினர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது மனைவி நிர்மலாவுக்கு சொந்தமான இட த்தில் புதிதாக கட்டி வரும் வீட்டினை மதிப்பீட்டுப் பிரிவினர் ஆய்வு செய்தனர்.