ராமர் கோயில் திறப்பு: தங்க முலாம் பூசப்பட்ட காலணியுடன் 7,200 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்ட முதியவர்

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ராமருக்காக செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை ஏந்தியபடி அயோத்தி ராமர் கோயிலுக்கு 7,200 கிலோமீட்டர் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ல் நடைபெறவிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இதையொட்டி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சல்லா ஸ்ரீனிவாஸ் சாஸ்திரி (64 வயது). இவர் ராமர் மீது தீவிர பக்தி கொண்டவராவார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சல்லா ஸ்ரீனிவாஸ் சாஸ்திரி அயோத்தி ராமர் கோயிலை அடைய அயோத்யா-ராமேஸ்வரம் பாதையில் பயணிக்கிறார். ராமருக்காக செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்து கொண்டு கிட்டத்தட்ட 7,200 கி.மீ தூரத்தை நடந்தே கடக்க திட்டமிட்டுள்ளார். புனித நகரத்தை அடைந்ததும், அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் காலணிகளை ஒப்படைக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அவர் அயோத்தியை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “8 கிலோ வெள்ளியில் தயாரிக்கப்பட்ட காலணிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. ஜனவரி 15 ஆம் தேதி அயோத்தியை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு. ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவுக்கு முன்னதாக அயோத்திக்குச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் 32 ஆண்டுகளாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22-ஆம் தேதியுடன் தனது கனவு நனவாகிவிட்டதாக, தனது 32 ஆண்டு கால ‘மவுன விரதத்தை’ முறித்துக் கொள்ளவும் இருக்கிறார். 1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தரான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும் வரை மவுன விரதம் இருக்கப்போவதாக உறுதிபூண்டது தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.