`திட்டத்தின் பெயரை இந்தியில் மாற்ற மறுத்தோம்… நிதி தாமதமாகிறது!' – கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

இந்தியா முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மத்திய அரசின் 60 சதவிகித நிதியாலும், மாநில அரசின் 40 சதவிகித நிதியாலும் கூட்டாக இயங்கி வருபவை. இந்த திட்டம் கேரளாவில் குடும்ப ஆரோக்கிய கேந்திரம் (Kudumbarogya Kendram) என்ற பெயரில் செயல்படுகிறது.

இந்த நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கேரளாவில் குடும்ப ஆரோக்கிய கேந்திரம் திட்டப் பணிகள் செயல்பட்டு வருகின்றன.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

2023-24 ஆண்டின் இந்த திட்டத்துக்கான மத்திய அரசின் 60 சதவிகித மானியம், ரூ.371.20 கோடி. இது நான்கு தவணைகளில் மாநில அரசிடம் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், மூன்று தவணைகளுக்கான தேதிகள் ஏற்கெனவே கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் மத்திய அரசு அந்த தொகையை வழங்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான தொகையை மாநில அரசு ஒதுக்கியிருக்கிறது.

அதன் மூலம்தான் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம், நோயாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைப் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்தோம். அப்போது மத்திய அரசு, இந்த திட்டத்தில், மாநில அரசின் சின்னத்துடன் மத்திய அரசின் சின்னமும் இடம்பெற வேண்டும் என்பது போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மத்திய அரசின் மற்ற கோரிக்கைகளை மாநில அரசும் ஏற்றுக்கொண்டு, ஓரிரு ஆண்டுகளில் கட்டப்பட்ட சுகாதார மையங்களின் பலகைகளில் மத்திய அரசு வழங்கிய ஆறு சின்னங்களை உள்ளடக்கியபடி அமைத்திருக்கிறோம். இருப்பினும் மத்திய அரசு உரிய மானியத்தைக் கொடுக்கவில்லை.

அது குறித்துப் பேசியபோது, மாநிலத்தின் தேசிய சுகாதார இயக்க மையங்களுக்கான ‘குடும்ப ஆரோக்ய கேந்திரம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்’ என்று பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தப் பெயர்மாற்ற அறிவிப்பு கடந்த மாதம்தான் வந்தது. ஏற்கெனவே, இந்த ஆண்டுக்கான விளம்பரப் பணிகள் 99 சதவிகிதம் முடிந்து விட்டது. ஆனாலும் இந்த பெயர் மாற்ற முடிவை ஏற்க முடியாது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

மத்திய அரசு வலியுறுத்தும் அந்தப் பெயர், கேரள மக்களின் கலாசாரம் மற்றும் மாநில மொழியுடன் பொருந்தாமல் இருப்பதாலும், கிராமப்புற மக்களுக்குப் புரியாத வகையில் உள்ளதாலும், பெயர் மாற்றத்திற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை. அதனால் இந்த மானியத் தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது. இதனால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு கூறும் பெயரை மாற்ற மாநில அரசு மறுப்பதால்தான், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்துக்கு விடுவிக்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்து, அரசியல் செய்கிறது’ என்ற விமர்சனம், அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.