சென்னை செங்குன்றம், பாடியநல்லூர், பாரதி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி வித்தியா (29). இந்தத் தம்பதிக்கு கிருஷ்ணபிரியன் (10), ஹேமநாத் (7) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஹேமநாத், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பாபுவுக்கும் வித்தியாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனால் வித்தியா, தன்னுடைய குழந்தைகளுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் ஹேமநாத், அந்தப் பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். அப்போது அவருக்கு விஷாந்த், திருமுருகன் ஆகியோர் நண்பர்களாகினர்.

சம்பவத்தன்று பாடியநல்லூர் வீரமாமுனிவர் தெருவில் உள்ள விஷாந்த் வீட்டுக்கு விளையாட ஹேமநாத் சென்றார். டியூஷனுக்கு மகன் ஹேமநாத்தை அழைத்துச் செல்ல விஷாந்த் வீட்டுக்கு வித்தியா சென்றிருக்கிறார். அப்போது ஹேமநாத், மாடிப்படியிலிருந்து வேகமாக கீழே இறங்கி மறைந்திருந்து விளையாட்டு காட்ட வேண்டும் என்ற ஆசையில் முதலில் கீழே இறங்கியிருக்கிறார். பின்னர் மறைந்து நிற்க அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் ஏறி நிற்க முயன்றார். அப்போது தொட்டியின் மேலிருந்த இரும்பு பிளேட் திடீரென உடைந்து, கழிவுநீர் தொட்டிக்குள் சிறுவன் ஹேமநாத் விழுந்தார். அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து வித்தியா மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கழிவுநீர் தொட்டியிலிருந்து ஹேமநாத்தை மீட்க முயன்றார். ஆனால் முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஹேமநாத்தை மீட்டு பாடியநல்லூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஹேமநாத்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து வித்தியா அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சிறுவன் ஹேமநாத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சிறுவன் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.