ஆளுநர் – பெரியார் பல்கலை. துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஆளுநர் நேரில் சந்தித்துள்ளது ஆளுநர் மீது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார்.துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் மீதான குற்றச்செயல்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜன.11) காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. இந்தச் சூழலில் அரசியலமைப்பு அதிகாரப் பொறுப்பில் உள்ள ஆளுநர் “கலந்துரையாடல்” நிகழ்வுக்காக பல்கலைக் கழகம் வளாகம் சென்றதும், அங்கு குற்றக் கறை படிந்த துணைவேந்தர் உட்பட பேராசிரியர்களை அழைத்து பேசியதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விசாரணை நடந்து வரும் சூழலில் ஆளுநர் வருகை தருவது சரியல்ல என மாணவர், இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அலட்சியம் செய்து, அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு, ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையால் குற்றவாளிகள் தப்பித்து செல்ல, சாட்சியங்கள், ஆவணங்கள் இடம் மாற்றப்படுமோ என ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள அரசுக்கு, ஆளுநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில் ஆளுநர், முதலமைச்சரை சந்தித்து பேசி சுமூக நிலைக்கு திருப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் அறிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் ரத்து செய்து, இரண்டொரு நாளில் சேலம் பெரியார் பல்கலைக்கழக நிகழ்வு மீண்டும் எதிர்மறையான திசையில் செல்ல முயற்சிப்பதை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் எனும் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.