ரூ.6 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்து வெற்றி பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 11, 12-ம் தேதிகளில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கான மாநாட்டையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.
தமிழ்நாட்டில் பிறந்து படிப்புக்காகவும், வேலைக்காகவும் மற்றும் தொழில் காரணங்களுக்காகவும் உலகமெங்கும் உள்ள நாடுகளில் குடியேறி இருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயலகத் தமிழர்கள் தினத்தை முன்னிட்டு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து பேசினார்.
அவர் பேசியதாவது, “அகிலமெங்கும் பரந்து விரிந்த நாடுகளில் குடியேறி இருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாகப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்கள் மீது கொண்ட அக்கறை காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் அயலகத் தமிழர் நலவாரியத்தைத் தொடங்கினார். வர்த்தக காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் செல்வது பண்டை காலங்களிலிருந்தே இருக்கிறது என்றாலும் சமீப காலங்களில் வெளிநாடுகளில் தமிழர்கள் வேலையிலும் மற்றும் தொழிலிலும் சிறந்து விளங்குவது அதிகரித்திருக்கிறது.
இதனால் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே தமிழ் பேசுகின்ற மக்களைப் பரவலாகக் காண முடிகிறது. கிட்டதட்ட 130-க்கும் மேலான நாடுகளில் தமிழ் சொந்தங்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சூழல். சர்வதேச அரசியல் சூழலில் எப்போது என்ன நடக்குமென்று தெரியாத நிலைதான் உள்ளது.
கொரோனா காலத்திலிருந்து தொடங்கி, ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் வரை வெளிநாடுகளில் அசாதாரணமான சூழல்கள் உண்டாகி இருக்கின்றன. இது போன்ற தருணங்களில் எல்லாம் அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனை அயலகத் தமிழர்கள் நல வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுபோன்ற சவாலான சமயங்களில் அங்குள்ள தமிழர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவருகிறது.
முன்பெல்லாம் வெளிநாடுகளில் தமிழர்கள் யாரேனும் மரணமடைய நேர்ந்தால் அவர்கள் உடலை தமிழகத்துக்குக் கொண்டுவர பல மாதங்கள் ஆகும். ஆனால், இப்போது குறுகிய நாட்களிலேயே வெளிநாடுகளில் இறப்பவர்களின் உடலை தமிழகத்தில் இருக்கும் சொந்தங்களிடம் சேர்ப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
மேலும், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம் என்று பல ஏஜென்சிகள் மக்களை ஏமாற்றி மோசடி செய்திருக்கின்றன. ஆனால், அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. இதற்கு அயலகத் தமிழர் நலத் துறை எடுத்த முயற்சிகள் முக்கியமான காரணம். சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், அங்கீகாரமில்லாமல் இயங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுடன் இணக்கமாக இருப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் உதவி வருகிறது. உலகமெங்கும் சென்றாலும் தாயகத்தை மறக்காத தமிழர்களை எப்போதுமே தமிழ்நாடு அரசும் மறக்காது. இந்த உறவு எப்போதும் தொடரும்” என்று அவர் பேசினார்.
இவரது உரையாடித் தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தன. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு எனில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஒளிரும் எதிர்காலம் – வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பில் ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த அமர்வில் அவர் அயலகத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும், சவால்கள் குறித்தும் பேசினார். தமிழர்கள் எந்தச் சூழலையும் எளிதில் சமாளித்து முன்னேறும் திறனுடன் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கிறார்கள். பல நாடுகளில் தொழில் நிறுவனங்களை நிறுவி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
அதைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் ‘வணிகத்தில் தமிழர்கள் – வாய்ப்பும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது. அதில் அவர் பேசும்போது, “அயல் நாடுகளில் தமிழர்களின் தடம் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தமிழர்கள் பல்துறையில் திறமைமிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் வேலைக்காக மட்டும் தமிழர்கள் அயல் நாடுகளுக்குச் செல்வதில்லை.
தொழில் செய்வதிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் செய்கிறார்கள்.

தமிழர்கள் அயல்நாடுகளில் தொழில் செய்வதற்கும், வேலைவாய்ப்புகளுக்காக அயல்நாடுகளுக்குச் செல்பவர்களுக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இதனால் மேலும் மேலும் தமிழர்கள் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக மாறியிருக்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் எப்போதுமே அரசு துணை நிற்கும்” என்று பேசினார்.
அயலகத் தமிழர்களை தமிழகத்துடனான உறவை மேலும் வலுப்படுத்துவதாக இருந்தது இந்தக் கருத்தரங்கம்…!