கீவ்: போர் என்பது துயரக் கதைகளின் முழு உருவகம் என்றாலும் அதன் கூடவே வீரம், தேசப்பற்று, யுத்தக் களத்தில் பூத்த காதல், கனிந்த மனிதாபிமானம் என சில பல கதைகள் அவ்வப்போது அரும்புவதுண்டு. அந்த வரிசையில் இந்தக் கதை சற்று வித்தியாசமான கதை. கவனம் ஈர்த்த இறுதிச் சடங்கு பற்றிய கதை. இறந்தவன் போர் வீரன் அல்ல. ஒரு கவிஞன். கவிஞனாக எழுத்தால் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட அந்த இளைஞன் தன் தாய்நாட்டைக் காக்க போரில் இணைந்து வீரமரணம் அடைந்துள்ளான். இது வீரமும், தியாகமும், ஞானமும் கலந்த கதை. இக்கதை நடந்தது உக்ரைன் நாட்டில். உக்ரைன் – ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் அந்த கவிஞன்!? – மேக்சிம் க்ரிவ்ட்ஸோவ். இதுதான் அந்தக் கவிஞனின் பெயர். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ரஷ்யாவிடமிருந்து க்ரிமியா பிரிந்தபோதிலிருந்து இவர் உக்ரைன் பாதுகாப்புக்காக போரில் ஈடுபட்டுவந்தார். பின்னர் சிறிது காலம் போரில் இருந்து ஓய்வு பெற்று பொதுச் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்தார். சமூக சேவைகள், எழுத்து என இருந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் மீண்டும் ராணுவத்தில் இணைந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நடந்த மோதலில் இவர் உயிரிழந்தார். பனிக்காலத்தில் ரஷ்யா தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் கார்கிவ் பகுதியின் குப்பியான்ஸ்க் எனுமிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார்.
முதலும் கடைசியுமாக… – இவர் முதலும் கடைசியுமாக ஒரு புத்தகம் எழுதினார். “Poems from the Loophole” (துளையின் ஊடான கவிதைகள்) என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு 2023-ல் அதிகமாக விற்பனையானது. அவருடைய ஒற்றைப் புத்தகத்துக்கு லட்சோப லட்ச ரசிகர்கள் உருவாயினர். இந்தப் புத்தகம் முழுவதும் நிறைந்துள்ள கவிதைகள் போரின் தாக்கம் பற்றி, அதன் கோர முகம் பற்றி பிரதிபலிப்பதாக உள்ளது என்பதே உக்ரைன் மக்கள் மத்தியில் அபிமானம் பெறக் காரணமாகியது. போரைப் பற்றி எழுதிய கவிஞன் போரிலேயே இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கண்ணீர் அணிவகுப்பு… – இந்நிலையில், கீவ் நகரின் புனித மைக்கேல்ஸ் தேவாலயத்தின் முன்னால் இறுதி அஞ்சலி நடந்தது. ராணுவ மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கு சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த கவிஞனின், வீரனின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சாரைசாரையாக மக்கள் குறிப்பாக அவர் கவிதைகளுக்கான ரசிகர்கள் உக்ரைன் கொடியில் உள்ள மஞ்சள், ஊதா நிற ரிப்பன்கள் சுற்றப்பட்ட மலர் கொத்துகளுடன் வந்தனர். கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். மண்டியிட்டு அழுதனர்.
க்ரிவ்ட்ஸோவின் தாத்தா இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பேசுகையில், “என் பேரன் உயிரிழக்கவில்லை. அவன் இன்னொரு காக்கும் தேவதையாக வழிநடத்துவான். இருப்பினும் அவன் இழப்பு என் இதயத்தின் ஒரு பகுதி சிதைந்துபோனது” என்றார். தொடர்ந்து, க்ரிஸ்டோவின் உடல் அவரது சொந்த கிராமமான ரிவைனில் இன்று (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.