“விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம்!" – கார்த்தி ஆதங்கம்!

கார்த்தியின் `உழவன் பவுண்டேஷன்’ ஒவ்வொரு ஆண்டும் ‘உழவர் விருதுகள் விழா’வை நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது.

சினிமாவில் மட்டுமல்ல, விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அவரது ‘உழவன் பவுண்டேஷன்’ குளங்கள் தூர் வாருவது உள்பட விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. தவிர, ‘உழவர் விருதுகள்’ விழாவை நடத்தி விவசாயத்துறையில் சாதனை படைத்த ஆளுமைகளையும் கவுரவித்து வருகிறது.

சிவகுமாருடன்..

‘உழவர் விருதுகள்’ விழாவில் கார்த்தியுடன், சிவகுமார், ரோகிணி, தம்பி ராமையா, பசுபதி, கீர்த்தி பாண்டியன் என சினிமாவில் இருந்தும், மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

விழாவில் நடிகர் கார்த்தி பேசும் போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.

பசுபதி

சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம். இது 5-வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம். விருதுக்கான ஆளுமைகளை வாழ்த்தி வணங்குகிறேன்.” என்றார்.

உழவர்களின் விளைப் பொருட்களுக்கு நல்ல விலை பெற்று தரும் மதுரை, திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ் அவர்களுக்கு உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான விருதும், விவசாயிகளை பற்றியும் அவர்கள் விளைப் பொருட்கள் பற்றியும் முக்கியமாக பெண் விவசாயிகள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் அபர்ணா கார்த்திகேயன் அவர்களுக்கு சிறந்த வேளாண் ஊடகவியலாளருக்கான விருதும் உழவர் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது.

கீர்த்தி பாண்டியனுடன்..

தவிர நிலமற்ற பெண்கள் ஒன்றிணைந்து தரிசு நிலத்தை ஒரு கூட்டுப் பண்ணையாக மாற்றிய பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்திற்கு சிறந்த உழவர் கூட்டமைப்புக்கான விருதும், பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராடி தனி குடியிருப்பும் அவர்களின் வேளாண் பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்க தொடர்ந்து பங்காற்றி வரும் பழங்குடி சமூகப் பெண் ராஜலெட்சுமி அவர்களுக்கு, வனம் சார்ந்த மக்களின் வேளான் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான விருதும், பல்வேறு நீர் நிலைகளை சீரமைக்க பெரும் பங்காற்றிய சித்ரவேல் அவர்களுக்கு நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்புக்கான விருதும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.