“ராமர் கோயில் கட்டும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது” – இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர்

ஷிம்லா: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது என்று இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியுமான பிரதிபா சிங் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் வீடியோவில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு ஆலயங்களை அவர் புதுப்பித்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். ஆனால், வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இமாச்சலப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 98 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள். நாங்கள் கடவுள் ராமர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என பிரதிபா சிங் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கப் போவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். “அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்கு எனது தந்தை எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இது மதம் சார்ந்த விஷயம். நாங்கள் இந்துக்கள். எங்கள் மதத்தை முன்னோக்கி கொண்டு செல்வது, எங்கள் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைப்பது ஆகியவை எங்கள் கலாச்சாரம். இந்த திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்” என அவர் கூறியிருந்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த மாதம் பெற்றனர். நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன.

தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.